சினிமா செய்திகள்
‘‘என்னை மாற்றிய கமல்ஹாசன்’’ – ராணிமுகர்ஜி

இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராணிமுகர்ஜி. இவர் பிரபல தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகி இருக்கிறார்.
இந்தியில் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருக்கும் ராணிமுகர்ஜி நடிகர் கமல்ஹாசன் தன்னை சிறந்த நடிகையாக மாற்றியதாக கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த சினிமா பட விழாவில் ராணிமுகர்ஜி கலந்து கொண்டார். அங்கு அவருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் ராணிமுகர்ஜி பேசியதாவது:–

‘‘என் சினிமா வாழ்க்கையில் ‘ஹேராம்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்புக்கு முகம் நிறைய மேக்கப் போட்டுக் கொண்டு சென்றேன். என்னை உற்று நோக்கிய கமல்ஹாசன், முகத்தை கழுவி விட்டு வாருங்கள் என்றார். எனது அறைக்கு சென்று முகத்தில் இருந்த மேக்கப்பை துடைத்து விட்டு வந்தேன்.

மீண்டும் எனது முகத்தை பார்த்த அவர் மேக்கப்பை முழுவதுமாக அகற்றி விட்டு வாருங்கள் என்றார். நான் எனது அறைக்கு சென்று மேக்கப்பை முழுவதுமாக நீக்கி விட்டு ஒரிஜினலாக வந்தேன். மேக்கப் போடாமல் படப்பிடிப்பு அரங்குக்குள் இருந்தது அதுதான் முதல்முறை. அதன்பிறகு எனக்கு நம்பிக்கை வந்தது. நடிப்பு என்றால் என்னவென்றும் புரிந்தது.

கதாநாயகிகள் மேக்கப் போட்டுக்கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் நடிப்பை வெளிப்படுத்த ‘மேக்கப்’ அவசியம் இல்லை என்று உணரவைத்து என்னை மாற்றியவர் கமல்ஹாசன். நடிகைகள் அவர்களது தோற்றம், எடை, தலைமுடி போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால்தான் முழுமையான நடிப்பை வெளிப்படுத்த முடியும்.’’

இவ்வாறு ராணிமுகர்ஜி கூறினார்.