சினிமா செய்திகள்
தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் : தனுசை பாராட்டிய விவேக்

விவேக் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘எழுமின்’. தேவயானியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.
எழுமின் படத்தை வி.பி.விஜி தயாரித்து இயக்கி உள்ளார். எழுமின் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் நடிகர் விவேக் பேசும்போது, ‘‘தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து எழுமின் படம் தயாராகி உள்ளது. தமிழ் நாட்டில் சமீப காலமாக பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகி வருகிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்நின்று நடத்தி வென்று காட்டிய மாணவர்கள்தான் அந்த உண்மையான சூப்பர் ஸ்டார்கள். இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஒரு பாடல் பாடி இருக்கிறார். சினிமாவில் தன்னம்பிக்கையால் உயர்ந்து இருப்பவர் நடிகர் தனுஷ். நான் கேட்டவுடன் மறுக்காமல் வந்து பாடிக் கொடுத்தார். இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு பாடலை பாடி உள்ளார்’’ என்றார்.

இசையமைப்பாளர் இமான் விழாவில் பேசும்போது,  ‘‘விவேக் நடித்த நிறைய படங்களுக்கு ஆரம்ப காலகட்டங்களில் இசையமைத்து இருக்கிறேன். ஆரம்பத்தில் வாய்ப்பு இன்றி விரக்தியோடு இருந்த என்னை ஊக்கப்படுத்தியவர் விவேக். இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லும் படமாக எழுமின் தயாராகி உள்ளது. இந்த மாதிரி படங்கள் அதிகம் வரவேண்டும்’’ என்றார்.

விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் ஆரி, உதயா, மயில்சாமி, இசையமைப்பாளர்கள் ஹிப் ஹாப் ஆதி, ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், இயக்குனர் வி.பி.விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.