‘‘என் பிடிவாதத்தால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தேன்’’ – நடிகை மனிஷா யாதவ்

பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், மனிஷா யாதவ்.

Update: 2018-08-25 23:00 GMT
‘ஆதலால் காதல் செய்வீர்,’ ‘ஜன்னல் ஓரம்,’ என வரிசையாக திறமையான நடிப்பின் மூலம் முத்திரை பதித்த இவர், சமீபத்தில் திரைக்கு வந்த ‘ஒரு குப்பை கதை’ படத்தின் மூலம் ரசிகர்களின் ஒட்டு மொத்த ஆதரவை அள்ளினார்.

நிதானமாக கதைகளை தேர்வு செய்து நடிப்பது, ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்துக்காக முழுமையான அர்ப்பணிப்போடு உழைப்பது என அவசரப்படாமல், தமிழ் சினிமாவில் 5 ஆண்டுகளை இவர் நிறைவு செய்து இருக்கிறார். இந்த பக்குவம் பற்றி மனிஷா யாதவ் கூறியதாவது:–

‘‘பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், கரு.பழனியப்பன் என வரிசையாக நான் நடித்த முதல் மூன்றுமே முக்கியமான டைரக்டர்களின் படங்கள். அந்த வகையில், நான் அதிர்ஷ்டசாலி. ‘வழக்கு எண்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே எனக்கு ‘ஆதலால் காதல் செய்வீர்’ பட வாய்ப்பு வந்தது. அதேபோல்தான் ‘ஜன்னல் ஓரம்’ படமும்.

இந்த மூன்று படங்களுமே எனக்கு சினிமாவை கற்றுக் கொடுத்தன. அதனால்தான் ‘ஒரு குப்பை கதை’ படம் என்னை தேடிவந்தபோது, உடனே சம்மதிக்க வைத்தது. என் மனதுக்கு திருப்தி தராத கதைகளில் நடிக்க விரும்புவதில்லை. படத்தில், வெறும் பொம்மையாக வந்து போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. என் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்.

நிறைய படங்களை என் பிடிவாதத்தால் இழந்துள்ளேன். கதையும், கதாபாத்திரமும்தான் எனக்கு முக்கியம். இப்போது நான் தீவிரமாக கதை கேட்டு வருகிறேன். ‘ஒரு குப்பை கதை’யைப்போல் கனமான கதையம்சம் உள்ள ஒரு படம் என்னை தேடி வந்து இருக்கிறது. மேலும் சில கதைகளையும் கேட்டு வருகிறேன்.’’

இவ்வாறு மனிஷா யாதவ் கூறினார்.

மேலும் செய்திகள்