சினிமா செய்திகள்
‘‘ஜோதிகா மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு’’–சிம்பு பேட்டி

ஜோதிகா மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு என்று நடிகர் சிம்பு கூறினார்.
ராதாமோகன் டைரக்‌ஷனில் உருவாகி வரும் ‘காற்றின் மொழி’ படத்தில், சிம்பு கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார். விதார்த், லட்சுமி மஞ்சு ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தனஞ்செயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்செயன் ஆகிய மூன்று பேரும் கூட்டாக தயாரித்து இருக்கிறார்கள்.

இந்த படத்தில், ‘ஹலோ எப்.எம்.’ ரேடியோவின் நிகழ்ச்சி தொகுப்பாளராக ஜோதிகா நடித்துள்ளார். அவருடன் சினிமா நட்சத்திரமாக சிம்பு தோன்றும் காட்சி, ‘ஹலோ எப்.எம்.மில் படமாக்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்படி, சிம்புவிடம் டைரக்டர் ராதாமோகன் கேட்டதும், நடிக்க சம்மதித்தார். இதுபற்றி சிம்புவே கூறுகிறார்:–

‘‘காற்றின் மொழி படத்தில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை ராதாமோகன் சொன்னதும், அந்த காட்சிகள் அனைத்தும் எனக்கு பிடித்து இருந்தது. ஜோதிகாவுடன் திரையில் தோன்றுவதில் மகிழ்ச்சி. அவர் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. ‘‘கண்டிப்பாக நடிக்கிறேன்’’ என்று கூறி, நடித்துக் கொடுத்தேன்.’’

இவ்வாறு சிம்பு கூறினார்.

இந்த படத்துக்காக சிம்பு ஒரே நாளில், ‘டப்பிங்’ பேசி முடித்தார். அப்போது, ‘‘என் தொடர்பான காட்சிகள் மிக சிறப்பாக வந்து இருக்கிறது’’ என்று தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

‘‘சிம்பு, இந்த படத்தில் நடித்தது, படத்துக்கு பெரிய பலம். அவருக்கும் படத்தில் நடித்ததில் சந்தோ‌ஷம். ‘காற்றின் மொழி’ படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும்’’ என்று பட அதிபர் தனஞ்செயன் கூறினார்.