சினிமா செய்திகள்
மத்திய பிரதேச அரசு வழங்குகிறது டைரக்டர் பிரியதர்‌ஷனுக்கு கிஷோர் குமார் விருது

பிரபல டைரக்டர் பிரியதர்‌ஷன். இவர் தமிழில் சின்ன மணிக்குயிலே, கோபுர வாசலிலே, சினேகிதியே, லேசா லேசா, காஞ்சிவரம், நிமிர் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
மலையாள பட உலகில் முன்னணி இயக்குனராக உள்ளார். இந்தியிலும் 26 படங்கள் டைரக்டு செய்துள்ளார். அனைத்து மொழிகளிலும் 95 படங்கள் இவரது டைரக்‌ஷனில் வந்துள்ளன.

காஞ்சிவரம் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. பிரியதர்‌ஷனின் திரையுலக சாதனைகளுக்காக அவருக்கு மத்திய பிரதேச அரசு பாடகர் கிஷோர் குமார் விருதை அறிவித்து உள்ளது. சினிமா இயக்கம், நடிப்பு, திரைக்கதை, பாடல்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இப்போது பிரியதர்‌ஷன் இந்த விருதுக்கு தேர்வாகி உள்ளார்.

இந்த விருதை இதற்கு முன்பு அமிதாப்பச்சன், ரிஷிகேஷ் முகர்ஜி, குல்சார், ஷியாம் பெனகல் ஆகியோர் பெற்று இருக்கிறார்கள். கிஷோர் குமார் விருதுக்கு தேர்வான பிரியதர்‌ஷனுக்கு நடிகர்–நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதுபற்றி பிரியதர்‌ஷன் கூறும்போது, ‘‘கிஷோர் குமார் விருதுக்கு என்னை தேர்வு செய்தது ஆச்சரியமாக உள்ளது. தென்னிந்தியாவில் இருந்து இந்த விருதை முதன்முதலில் பெறுவது நான்தான். கிஷோர் குமாரின் பெரிய ரசிகன் நான்’’ என்றார். இந்தூர் அருகில் உள்ள கிஷோர் குமார் வீட்டில் நடக்கும் விழாவில் இந்த விருதை பிரியதர்‌ஷனுக்கு மத்திய பிரதேச முதல்–மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் வழங்குகிறார்.