சினிமா செய்திகள்
சொந்தமாக வீடு கட்டிய நடிகை ரோஜா

செம்பருத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோஜா தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சூரியன், உழைப்பாளி, அதிரடிப்படை, வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல படங்கள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்தன. தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். 2002–ல் டைரக்டர் ஆர்.கே.செல்வமணியை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

ரோஜா அரசியலுக்கு வந்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 2 தடவை நகரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் ஜெகன் மோகன் கட்சியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அந்த கட்சி சார்பில் அதே தொகுதியில் போட்டியிட்டு இப்போது எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

‘‘தெலுங்கு தேசம் கட்சியினர் எனக்கு நகரி தொகுதியில் சீட் கொடுத்துவிட்டு காங்கிரசுடன் கைகோர்த்து தோற்கடித்தனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் வாழ்க்கையின் கடைசி காலம் வரை இருப்பேன்’’ என்று ரோஜா கூறினார். ‘‘நகரி தொகுதி எனக்கு சொந்த வீடுபோல் ஆகிவிட்டது. இங்கு 60 சதவீதம் தமிழர்கள் உள்ளனர். எனக்கு பிறந்த வீடு ஆந்திராவாக இருந்தாலும் புகுந்த வீடு தமிழ்நாடு’’ என்றும் கூறினார்.

நகரியில் தமிழர்கள் மத்தியில் தமிழிலும், தெலுங்கர்களிடம் தெலுங்கு மொழியிலும் பேசுகிறார். ரோஜாவுக்கு அங்கு சொந்தவீடு இல்லை. நகராட்சி தலைவர் வீட்டிலேயே வசித்து வந்தார். இப்போது நகரியில் இடம் வாங்கி சொந்தமாக பங்களா கட்டி இருக்கிறார். இந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் இன்று நடக்கிறது. இதற்காக தொகுதி முழுவதும் சுற்றி வந்து அழைப்பிதழ் கொடுத்து அனைவரையும் அழைத்து உள்ளார்.