சினிமா செய்திகள்
சினிமா பற்றிய தமன்னாவின் கணிப்புகள்

நடிகை தமன்னா தனது சினிமா அனுபவங்கள் பற்றி பேசினார்.
‘‘நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் புரியாமல் இருந்தாலும் இப்போது ரொம்ப தெளிவாகி விட்டேன். திரையுலகம் பற்றிய நல்ல புரிதல் ஏற்பட்டு உள்ளது. எனது நிஜ வாழ்க்கைக்கும், சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதையும் உணர்கிறேன். சினிமாவுக்கு வந்த புதிதில் கிடைத்த படத்திலெல்லாம் நடித்தேன்.

அதனால் சில படங்கள் எதிர்மறையாக அமைந்தன. பாகுபலிக்கு பிறகுதான் சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்தது. அதுவரை இந்தியில் நான் சில படங்களில் நடித்து இருந்தாலும் என்னை அங்கீகரிக்காமலேயே இருந்தனர். பாகுபலியை டப்பிங் செய்துதான் இந்தியில் வெளியிட்டனர். ஆனாலும் எனது நடிப்பை கொண்டாடினார்கள்.

படங்களில் நடிக்கும்போது அதன் பலன் எப்படி இருக்கும்? வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா? என்று யாராலும் கணிக்க முடியாது. ஒவ்வொரு படத்தையும் முக்கிய படமாக கருதியே நடிக்கிறோம். ஆனால் சில படங்கள் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றன. சில படங்கள் வெற்றிபெறும் என்று நினைப்போம். அது தோற்றுவிடும். சில படங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் நடிப்போம். அது ஜெயித்து விடும்.

சினிமாவில் எதிர்பார்ப்பது நடக்காது. எதிர்பாராதது நடக்கும். நடிகர்களுக்கு பெயர் புகழ், பணம் எல்லாவற்றையும் சினிமா கொடுக்கிறது. அபூர்வமான நல்ல படங்கள் எங்கிருந்து வரும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. திடீரென்று வரும். உயரத்துக்கு கொண்டு போய்விடும்.’’ இவ்வாறு தமன்னா கூறினார்.