சினிமா செய்திகள்
தற்கொலை முயற்சி கூடாது: வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு மஞ்சுவாரியர் வேண்டுகோள்

கேரள வெள்ளத்தில் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
ஆயிரக்கணக்கானோரின் வீடுகளும், உடைமைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இழப்புகளை சரி செய்ய ரூ.2,500 கோடி செலவாகும் என்று அரசு மதிப்பிட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிகின்றன.

வீடுகள், உடைமைகளை இழந்தவர்கள் மனவேதனையில் இருக்கிறார்கள். சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதை அறிந்து பிரபல மலையாள நடிகையும், நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவியுமான மஞ்சுவாரியர் அதிர்ச்சி அடைந்தார். அவர் நிவாரண முகாம்களுக்கு சென்று உணவு, உடைகள் வழங்கினார்.

அங்கு தங்கி இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி தற்கொலை முயற்சியில் யாரும் ஈடுபடக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். இது குறித்து முகநூல் பக்கத்தில் மஞ்சுவாரியர் கூறியிருப்பதாவது:–

‘‘தற்கொலை முயற்சிகள் அதிர்ச்சி அளிக்கின்றன. எந்த பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக்கொள்வது என்பது தீர்வாகாது. பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொண்டு அதில் இருந்து வெளியே வரவேண்டும். ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் போராட்ட குணம் இருக்கிறது. அதை வெளியே கொண்டுவர வேண்டும்.

தவறான முடிவுகள் எடுத்தால் அது உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இங்கு நமக்கு இருந்த உடைமைகள் அனைத்துமே நம்மால் வாங்கப்பட்டவை. அவற்றை மீண்டும் சம்பாதிக்க முடியும். இந்த உலகம் உங்கள் பின்னால் நிற்கிறது. எல்லோரும் புதிய வாழ்க்கையை தொடங்குங்கள்’’. இவ்வாறு மஞ்சுவாரியர் கூறியுள்ளார்.