கோவை குண்டு வெடிப்பு, கோத்ரா ரெயில் எரிப்பு பற்றி சர்ச்சைக்குரிய படம் எடுத்த டைரக்டருக்கு மிரட்டல்

படத்தின் டிரெய்லரை பார்த்ததும் எனக்கு மிரட்டல்கள் வருகின்றன என்று டைரக்டர் சண்முகம் முத்துசாமி கூறியுள்ளார்.

Update: 2018-08-29 22:00 GMT
‘அடங்காதே’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ், கதாநாயகியாக சுரபி நடித்துள்ளனர். சரத்குமார், மந்திரா பெடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். எம்.எஸ்.சரவணன் தயாரித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதீய ஜனதா கட்சியினர் எதிர்த்துள்ளனர். 

இதுகுறித்து படத்தின் டைரக்டர் சண்முகம் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

‘உண்மை சம்பவங்களை மையமாக வைத்து ‘அடங்காதே’ படத்தை எடுத்துள்ளோம். கோவை குண்டு வெடிப்பு, கோத்ரா ரெயில் எரிப்பு என்று இந்தியா முழுவதும் நடந்த சம்பவங்கள் படத்தில் இருக்கும். காசியில் இந்துக்களும், முஸ்லிம்களும் மத சடங்குகள் செய்ததை பார்த்தபோது இந்தப் படத்துக்கான கதை உருவானது. 

இந்தியாவில் இருப்பவர்கள் எங்கேயும் போய்விட முடியாது. பிரச்சினைகள் வரும்போது அடங்காமல் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது கதை. சரத்குமார் நல்ல அரசியல்வாதியாகவும், ஜி.வி.பிரகாஷ் மெக்கானிக்காகவும் வருகிறார்கள். மந்திரா பெடி போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றுள்ளார். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தின் மையப்புள்ளியில் படம் தொடங்கும். 

படத்தில் காவி உடை பயன்படுத்தப்பட்டு உள்ளது. டிரெய்லரை பார்த்ததும் பலர் என்னை திட்டினார்கள். மிரட்டல்கள் வருகின்றன. ஹவாலா மூலம் எனக்கு பணம் வந்து இருப்பதாகவும் பேசுகிறார்கள். நல்ல நோக்கத்துக்கான படமாக இது இருக்கும். தணிக்கை குழுவில் அனுமதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. தீபாவளிக்கு படம் திரைக்கு வரும்.’’

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்