சினிமா செய்திகள்
ஹிருத்திக் ரோ‌ஷன் பாலியல் தொல்லை கொடுத்தாரா?–திஷா பதானி விளக்கம்

நடிகை திஷா பதானிக்கு ஹிருத்திக் ரோ‌ஷன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதற்கு நடிகை திஷா பதானி விளக்கமளித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோ‌ஷன் குடும்பத்தகராறில் மனைவி சுசானேவை விவாகரத்து செய்தார். நடிகை கங்கனா ரணாவத்துடன் இவருக்கு தொடர்பு இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. இதுவே மனைவி பிரிவதற்கு காரணம் என்றும் கூறப்பட்டது. ஹிருத்திக் ரோ‌ஷனுடன் காதல் இருந்ததை கங்கனா ரணாவத் வெளிப்படுத்தியதால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. 

சமூக வலைத்தளத்தில் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி கருத்து பதிவிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்கள். இப்போது மனைவி சுசானேவுடன் ஹிருத்திக் ரோ‌ஷன் நெருக்கமாகி இருப்பதாகவும் இருவரும் மீண்டும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவி உள்ளது. ஓட்டல்களிலும், வெளிநாடுகளிலும் இருவரும் குழந்தைகளுடன் சுற்றும் படங்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த நிலையில் நடிகை திஷா பதானிக்கு படப்பிடிப்பில் ஹிருத்திக் ரோ‌ஷன் பாலியல் தொல்லை கொடுத்து தவறாக நடக்க முயன்றதாகவும், இதனால் திஷா பதானி அந்த படத்தில் நடிக்க மறுத்து விலகியதாகவும் தகவல் வெளியானது. சமூக வலைத்தளங்களிலும் இது பரவியது. இதற்கு விளக்கம் அளித்து திஷா பதானி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:–

‘‘ஹிருத்திக் ரோ‌ஷனையும், என்னையும் பற்றி வெளியாகி உள்ள வதந்தி குழந்தைத்தனமானது. அதில் சிறிதும் உண்மை இல்லை. ஹிருத்திக் ரோ‌ஷன் படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்குமாறு இயக்குனர் என்னை அணுகவே இல்லை. ஹிருத்திக் ரோ‌ஷனுடன் சில முறை மட்டுமே பேசி இருக்கிறேன். அவர் எப்போதும் மரியாதையாக நடப்பவர். எனவே இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.’’

இவ்வாறு திஷா பதானி கூறியுள்ளார்.