சினிமா செய்திகள்
வெள்ள நிவாரணத்தில் விளம்பரமா?பிரியா வாரியருக்கு எதிர்ப்பு

நிவாரண நிதி கொடுத்துவிட்டு விளம்பரம் தேடுவதா? என்று பிரியா வாரியருக்கு சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
‘ஒரு அடார் லவ்’ மலையாள படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் கண், புருவ அசைவுகளால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் பிரியா வாரியர். சமூக வலைத்தளத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில் முன்னணி கதாநாயகிகளை பின்னுக்கு தள்ளினார். விளம்பர படங்களில் நடித்து சம்பாதித்தார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் அழைத்தனர். இப்படி பிரபலமானவராக இருக்கும் பிரியா வாரியர் கேரள வெள்ள பாதிப்புக்கு உதவ முதல்–அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சம் வழங்கினார். அந்த ரசீதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார். இது ரசிகர்களை கோபப்பட வைத்தது.

கேரளாவை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்டு எடுக்க ரூ.2,500 கோடி தேவை என்று அரசு மதிப்பிட்டு உள்ளது. 300–க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் வீடு உடைமைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் ரூ.1 லட்சத்தை நிவாரண நிதிக்கு கொடுத்துவிட்டு அந்த ரசீதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விளம்பரம் தேடுவதா? என்று பிரியா வாரியருக்கு சமூக வலைத்தளத்தில் கண்டனங்கள் குவிகின்றன. 

இதற்கு பதில் அளித்துள்ள பிரியா வாரியர் ‘‘விளம்பரத்துக்காக அதை செய்யவில்லை. மற்றவர்களும் நிவாரண நிதி வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் அப்படி செய்தேன்’’ என்று விளக்கம் அளித்துள்ளார்.