ஒரே சமயத்தில் 2 மொழிகளில் நடிக்க சமந்தாவுக்கு வந்த மிகப்பெரிய சவால்

நடிகை சமந்தாவுக்கு ஒரே சமயத்தில் 2 மொழிகளில் நடிக்க வேண்டிய மிகப்பெரிய சவால் வந்தது.

Update: 2018-09-01 22:00 GMT
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ராம்பாபு பண்டாரு தயாரித்துள்ள படம், ‘யு–டர்ன்’. இது, கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘யு–டர்ன்’ படத்தின் தழுவல். 

கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய அதே டைரக்டர் பவன்குமார்தான் தமிழ், தெலுங்கு படங்களையும் இயக்கி இருக்கிறார். இதில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர்கள் ஆதி, ராகுல் ரவீந்திரன், நரேன், நடிகை பூமிகா சாவ்லா ஆகியோரும் நடித்துள்ளனர். தமிழில் இந்த படத்தை தனஞ்செயன் வெளியிடுகிறார். 

‘யு–டர்ன்’ படத்தில் நடித்தது குறித்து சமந்தா கூறியதாவது:–

‘‘யு–டர்ன்’ பட டிரெய்லர் வெளியிடப்பட்டபோது, அதை 2 மில்லியன் பேர் பார்ப்பார்கள் என்றும், ரசிகர்கள் ஆதரவு இப்படி இருக்கும் என்பதையும் நான் எதிர்பார்க்கவில்லை. படத்தில் கதாநாயகன், கதாநாயகி என்று யாருமே இல்லை. படத்தின் கதை தான் உண்மையான கதாநாயகன். 

‘லூசியா’ படத்தில் இருந்தே நான் டைரக்டர் பவன்குமாரின் பெரிய ரசிகை. அப்போதே அவருடைய டைரக்‌ஷனில் ஒரு படம் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ‘யு–டர்ன்’ மூலம் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது. இது வெறும் திகில் படம் மட்டும் அல்ல. ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய ஒரு படம். எனவே முழுமூச்சாக ஒரே கட்டமாக இந்த படத்தை முடித்திருக்கிறோம். தமிழில் தனஞ்செயன் வெளியிடுவதால், படம் பாதுகாப்பான கைகளில் இருப்பதாக உணர்கிறேன். 

மிகவும் யதார்த்தமான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு எப்போதுமே ஆசை உண்டு. அந்த ஆசைதான் இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தது. படத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் நிறைய இருக்கிறது. ‘கிளிசரின்’ போட்டு நடிப்பது எனக்கு பிடிக்காது. கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்து முடித்தவுடனே, அதே காட்சியை இன்னொரு மொழி படத்தில் நடிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக அமைந்தது. கதாநாயகர்கள் மீதான சுமை எப்படி இருக்கும்? என்பதை ‘யு–டர்ன்’ படம் மூலம் நான் உணர்ந்தேன்.’’

இவ்வாறு சமந்தா கூறினார். 

மேலும் செய்திகள்