சினிமா செய்திகள்
சினிமா கேள்வி பதில்! : குருவியார்

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயன் என்ன வேடத்தில் நடிக்கிறார்? அவருக்கு ஜோடி யார்? (பி.கே.ரமேஷ் பாபு, புதுச்சேரி)

‘சீமராஜா’ படத்தில் சிவகார்த்திகேயன் 2 வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக சமந்தா, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். சமந்தா படம் முழுக்க வருகிறார். கீர்த்தி சுரேஷ், கவுரவ வேடத்தில் வருகிறார்!

***

பூஜாகுமார், ஒப்பனை இல்லாமலே மிக மிக அழகாக இருப்பாராமே... அப்படியா? (இரா.பொன் ராமதுரை, நாகர்கோவில்)

பூஜாகுமார், நிஜமாகவே நல்ல அழகிதான்!

***

சமந்தா திருமணத்துக்கு பிறகும் நடிப்பை தொடர்வது ஏன்? (ஆர்.செல்வசிங், கோவை)

‘துட்டு’ சம்பாதிக்கத்தான்...! காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளவர், சமந்தா. ‘மார்க்கெட்’ இருக்கும்போதே சம்பாதித்து வாழ்க்கையை வசதியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அதன் வெளிப்பாடே தொடரும் நடிப்பு!

***

பிரபு சாலமன் டைரக்‌ஷனில் அடுத்து வெளிவரும் படம் எது? (கே.ஹரிகுமார், தூத்துக்குடி)

‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கும்கி–2’ என்ற பெயரில் பிரபு சாலமன் டைரக்டு செய்கிறார். அவருடைய அடுத்த படம், இதுதான்!

***

குருவியாரே, விஷாலும், ஆர்யாவும் முன்பு போல் நட்பு பாராட்டுவதில்லையே... இருவருக்கும் என்னதான் ஆச்சு? (ஏ.நரேஷ், போரூர்)

இரண்டு பேருமே ‘பிஸி’யாகி விட்டதால், அவரவர் வழியில் சென்று வருகிறார்கள். இருவருக்கும் இடையேயான நட்பை புதுப்பிக்க சரியான நேரம் வரும் வரை, தனித்தனி வழிகளில் இருவரும் பயணத்தை தொடர்வார்களாம்!

***

குருவியாரே, ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தை தயாரித்த பட நிறுவனம் எது? அந்த படத்தின் சிறப்பு அம்சம் என்ன? (வி.கஜேந்திரன், மதுரை-1)

‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தை தயாரித்தது, சத்யா மூவீஸ் நிறுவனம். அந்த படத்தில் நடித்ததற்காகவே எம்.ஜி.ஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது!

***

நாயகி, மோகினி என வரிசையாக பேய் படங்களில் நடித்து வந்த திரிஷா, பேயாக நடிப்பை தொடர்வாரா அல்லது தொடர மாட்டாரா? (சி.அழகுராஜா, சேத்துமடை)

அவருக்கும், பேய்க்கும் ராசி இல்லை என்பதால், ‘மோகினி’ யோடு முற்றுப்புள்ளி வைத்து விட்டாராம்!

***

குருவியாரே, தற்போது தமிழ் திரையுலகை அதிகமாக ஆக்கிரமித்துள்ள நடிகைகள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்? அவர்களின் ஆக்கிரமிப்புக்கு என்ன காரணம்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

தமிழ் திரையுலகில், தற்போது கேரள மாநிலத்தை சேர்ந்த நடிகைகளே அதிகமாக ஆக்கிரமித்து இருக்கிறார்கள். அதற்கு காரணம், மும்பை உள்பட வட மாநிலங்களில் இருந்து வரும் நடிகைகளின் முகத்தில் அயல் மாநில சாயல் அதிகமாக தெரிகிறதாம். கேரளாவில் இருந்து வருபவர்களின் முகங்கள், தமிழ் பட கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதாம்!

***

குருவியாரே, டைரக்டர் விக்ரமனின் மகன் கனிஷ்கா என்ன செய்து கொண்டிருக்கிறார்? (வி.பரத், விளாத்திக்குளம்)

கனிஷ்கா, கதாநாயகனாக தயாராகி வருகிறார். அதற்காக சண்டை பயிற்சி, நடன பயிற்சி என பல பயிற்சிகளை கற்று வருகிறார்!

***

குருவியாரே, கேத்தரின் தெரசாவுக்கும், ரெஜினா கசன்ட்ராவுக்கும் இடையே என்ன பிரச்சினை? (எஸ்.மகேஷ், காஞ்சிபுரம்)

தொழில் போட்டிதான். வேறு எந்த பிரச்சினையும் இல்லை. கேத்தரின் தெரசா நடிக்க வேண்டிய படத்தை ரெஜினா கசன்ட்ரா பிடித்து விடு கிறாராம். ரெஜினா நடிக்க வேண்டிய படத்தை கேத்தரின் பிடித்து விடுகிறாராம்! இரண்டு பேருக்கும் இடையே சரியான போட்டி இருந்து வருகிறதாம்!

***

குருவியாரே, ‘வனமகன்’ படத்தில் அறிமுகமான சாயிஷா, படுகவர்ச்சியாக நடிக்க தயார் என்று கூறியிருக்கிறாரே...? (பி.கார்த்திக், ஊட்டி)

எப்படியாவது முன்னணி கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்பது சாயிஷாவின் ஆசை. அதற்கு ஒரே வழி மற்ற நடிகைகளை விட, படுகவர்ச்சியாக நடிப்பதுதான்...என்று அவர் கவர்ச்சியை நம்புகிறார்.

***

இந்தி நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் யார்- யார்? எவ்வளவு சம்பளம்...? (பி.சி.தருண்ராஜ், சேலம்-1)

இந்தி நடிகைகளில் அதிக சம்பளம் வாங்குபவர், பிரியங்கா சோப்ரா! இவருடைய சம்பளம் ரூ.10 கோடி! தீபிகா படுகோனே ரூ.8 கோடி, கங்கனா ரணாவத் ரூ.8 கோடி என முன்னணி நாயகிகள் அனைவரும் பல கோடிகளை சம்பளமாக வாங்கி வரு கிறார்கள்!

***

குருவியாரே, நயன்தாரா என்ற பெயரை சொன்னாலே எல்லா கதாநாயகர்களையும் கவர்ந்து இழுக்கிறதாமே...அப்படி என்னதான் வசிய மருந்து வைத்து இருக்கிறார்? (என்.ஆர்த்தி, அருப்புக்கோட்டை)

நயன்தாரா பக்கத்தில் போனாலே மரிக் கொழுந்து வாசனை தூக்கு கிறதாம். அந்த வாசனைதான் சிலருக்கு வசிய மருந்தாக தெரிகிறதாம்!

***

‘டார்ச் லைட்’ படத்தில் விலை மாதுவாக நடித்திருக்கும் சதா தொடர்ந்து அதுபோன்ற வேடங்களில் கவர்ச்சியாக நடிப்பாரா? (சு.ராஜு, நாட்டரசன் கோட்டை)

தயாரிப்பாளர் கொடுக்கும் சம்பளத்தை பொருத்தது, அது! அதிக சம்பளம் கொடுத்தால், கவர்ச்சி கூடுமாம். குறைந்த சம்பளம் கொடுத்தால், கவர்ச்சி குறையுமாம்!

***

அஞ்சலி காதல் திருமணம்தான் செய்து கொள்வார் என்று கோடம்பாக்கம் ஜோதிடர் உறுதியாக சொல்கிறாராமே...அப்படியானால் அவருடைய காதலர் யார்? (எம்.நித்திஷ், சேலம்)

ஜோதிடரின் கணிப்பு தவறாது. அஞ்சலியின் காதலர் விரைவில் வெளியே வருவார்!

***

குருவியாரே, ஸ்ரேயா மும்பை, பெங்களூரு, ஐதராபாத் என ஊர் ஊராக சுற்றி வருகிறாரே...ஏதாவது நேர்த்திக் கடனா? (வே.கவுதம், முகப்பேர்)

நேர்த்திக் கடன் அல்ல...அதற்கும் மேலே...ஸ்ரேயா ஊர் ஊராகப் போய் பத்திரிகையாளர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர...!

***