சினிமா செய்திகள்
இசையில் உருகும் வித்யா பாலன்

வித்தியாசமான வேடங்களை விரும்பி, தேடி நடிப்பவர், வித்யா பாலன்.
மாறுபட்ட கதாபாத்திரங்களை ஆசை ஆசையாய் ஏற்பது மட்டுமல்ல, அந்தப் பாத்திரங்களுக்காக மெனக்கெட்டுத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வதும் வித்யா பாலனின் சிறப்பு.

அந்த வகையில், என்.டி. ராமராவ் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் என்.டி.ஆர். மனைவி பசவதாரகமாக நடிக்கும் வித்யா, அதற்காக ஹார்மோனியம் இசைக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்.

ஹார்மோனியம் இசைக்கும் காட்சி, சினிமாவில் சிறிது நேரம்தான் வருமாம், ஆனாலும் அது இயற்கையாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக ஹார்மோனியம் வாசிக்க முறைப்படி கற்றுக்கொண்டிருக்கிறார் வித்யா.

என்.டி.ஆர். படத்தில் தான் நடிப்பது பற்றியும், அதில் தனது கதாபாத்திரம் பற்றியும் மனந்திறக்கிறார், வித்யா...

என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் ஒரு தொழில்முறை இசைக் கலைஞர் அல்ல. ஆனால் ஹார்மோனியம் வாசிக்கப் பயிற்சி பெற்றவர். அந்தக் கதாபாத்திரத் துக்காகவே நீங்கள் ஹார்மோனியம் வாசிக்கக் கற்றுக்கொள்கிறீர்களா?

"அந்தக் காட்சியை ரசிகர்கள் திரையில் சிறிதுநேரம்தான் பார்க்க முடியும் என்றாலும், அதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி்க்கொண்டு நாம் ஒரு புதிய திறமையைப் பெற்றால் நல்லதுதானே என்று எனக்குத் தோன்றியது. தவிர, ஓர் இசைக்கருவியை வாசிப்பது எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. ஆக, இந்தப் பாத்திரத்தின் காரணமாக, புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொண்டேன்''

உங்களுக்கு ஹார்மோன் வாசிக்கக் கற்றுக்கொடுத்த இசையமைப்பாளர் நிதின் சங்கர், ஹார்மோனியத்தின் அடிப்படையை நீங்கள் ஆறே நாட்களில் கற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறாரே?

``நிதின்ஜி எங்கள் வீட்டுக்கே வந்து, ஹார்மோனியத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தார். அவர் சொன்னபடி நான் திரும்பத் திரும்ப பயிற்சி செய்தேன். அதன் மூலம் படப்பிடிப்பின்போது ஹார்மோனியத்தில் நான் விரல்களை நகர்த்தி இசைக்கும் விதம் இயற்கையாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். நிதின்ஜி ஒரு ஜென்டில்மேன். எனது இந்த முயற்சியின்போது மிகவும் ஊக்குவித்தார். அவருடன் நான் மூன்று, நான்கு முறை உட்கார்ந்து பயிற்சி செய்துகொண்டேன். தற்போது, ஹார்மோனியத்தில் மேலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதில் நான் இதுவரை கற்றுக்கொண்டிருப்பதிலும் மகிழ்ச்சிதான்''

‘நான் எட்டாண்டுகள் கர்நாடக இசை கற்றவள்’ என்று முன்பு கூறியிருக்கிறீர்கள். அந்த அஸ்திவாரம், நீங்கள் இதுபோன்ற இசை சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவதற்கு உதவியாக உள்ளதா?

``ஆமாம், நான் கர்நாடக இசை கற்றிருப்பது நிறையவே உதவி புரிகிறது. செம்பூரில் குரு டி.எஸ். ஆனந்தராமனிடம் நான் கர்நாடக இசை கற்றேன். பெங்களூருவுக்கு ஓர் இசைத் தேர்வுக்காக நான் போனது ஞாபகம் வருகிறது. அது ஓர் இளங்கலைப் பட்டத் தேர்வு போன்றது. நான் அந்த தேர்வுக்குப் போகும் முன்பே, எங்கம்மாவும் எனது சகோதரியும் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். இசையறிவு என்பது உதவியாகவே இருக்கிறது. நான் இந்த என்.டி.ஆர். படக் கதாபாத்திரத்துக்காக மட்டும் சொல்லவில்லை. வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலுமே இசை ஞானம் உதவுகிறது. அந்த வகையில் இது ஓர் அற்புதமான விஷயம்.

எனக்கு இதற்கு முன், தம்புரா மட்டுமே வாசிக்கத் தெரியும். இந்தப் படவாய்ப்புக்கு முன்பு, தம்புராவைத் தவிர வேறு எந்த இசைக்கருவியையும் இசைப்பதற்கு நான் கற்றுக்கொள்வேன் என்று நினைத்ததே இல்லை. நான் இசை கலைஞர் இல்லை. ஆனால் இசையின் அடிப்படைகள் எனக்குத் தெரியும். ‘இஷ்கியா’ படத்தில் நான் தம்புரா இசைத்ததுடன், பாடவும் செய்தேன். அந்த அனுபவத்தை என்னால் முழுமையாக ரசித்து அனுபவிக்க முடிந்தது என்றால், அதற்குக் காரணம் என்னுடைய கர்நாடக இசை அறிவு. நமது பாரம்பரிய இசையைப் பெரிதும் மதிக்கும் நான், கர்நாடக இசைக் கச்சேரிகளுக்கும் ஆர்வத்துடன் செல்கிறேன். வாழ்வின் ஓர் ஒருங்கிணைந்த அங்கம் இசை அல்லது எனக்குள் உள்ள தென்னிந்தியர் இப்படிப் பேச வைக்கிறார்''

என்.டி.ஆர். படத்துக்காக ஹார்மோனியம் கற்றுக்கொண்டது தவிர வேறு எந்த வகையில் உங்களை நீங்கள் தயார்ப்படுத்திக்கொண்டீர்கள்?

``என்.டி.ஆர். மனைவி பசவதாரகம் பற்றி பொதுவாக வெளியில் அதிக தகவல் இல்லை. பசவதாரகம் ஒரு பெரிய நட்சத்திரத்தை, ஆந்திர மண்ணில் தெய்வமாகக் கொண்டாடப்பட்டவரை மணந்திருந்தாலும், மிகவும் தனிமை விரும்பி நபராக இருந்திருக்கிறார். ஆந்திர மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்த என்.டி.ஆர். ஒரு பரபரப்பான வாழ்க்கைக்குச் சொந்தமான, நாடறிந்த நபராக இருந்தவர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பசவதாரகத்தின் வாழ்க்கை பற்றி அதிகம் பேசப்படவோ, பதிவு செய்யப்படவோ இல்லை. நான் அவரது குழந்தைகள் சிலரைச் சந்தித்தேன். அவர்களில், பாலகிருஷ்ணாவும் அடங்குவார். அவரும் என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். நான் என்.டி.ஆர். - பசவதாரகம் தம்பதியின் மகள் லோகேஸ்வரியையும் சந்தித்துப் பேசினேன். அவரும் வீட்டில் தங்கள் அம்மா எப்படி இருப்பார் என்பது குறித்த சில முக்கியமான தகவல்களைத் தந்தார். சென்னையில் வசிக்கும் லோகேஸ்வரியின் சகோதரரையும் பார்த்து உரையாடினேன். இவற்றின் மூலம் கிடைத்த விஷயங்களைக் கொண்டு, பசவதாரகம் பாத்திரத்தை என்னால் உருவகப்படுத்திக்கொள்ள முடிந்தது. எனது இக்கதாபாத்திரம், கொஞ்சம் நிஜமும், நிறைய கற்பனையும் கலந்தது என்று சொல்லலாம். இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது''