சினிமா செய்திகள்
படமாகும் பாலியல் சர்ச்சை கதை ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு

தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றியதாக பரபரப்பு புகார் கூறி பட உலகை அதிர வைத்தவர் ஸ்ரீரெட்டி. தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் செக்ஸ் புகார் கூறினார்.
ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறி விட்டேன் என்று கூறிய அவர் இப்போது சென்னையில் தங்கி இருக்கிறார்.

ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை தமிழில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். அலாவுதீன் டைரக்டு செய்கிறார். சித்திரைச்செல்வன், ரவிதேவன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களையும் படத்தில் காட்சிபடுத்துகிறார்கள்.

இந்த படத்துக்கு தடைவிதிக்க முற்பட்டால் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று ஸ்ரீரெட்டி எச்சரித்து உள்ளார். இந்தநிலையில் ஸ்ரீரெட்டி படத்துக்கு டைரக்டரும் நடிகருமான வாராகி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஸ்ரீரெட்டி வாழ்க்கையை படமாக்குவது கலாசாரத்துக்கு எதிரானது. அவரது கதையை படமாக எடுக்க கூடாது. மீறி எடுத்தால் அதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தலைப்புக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.