சினிமா செய்திகள்
‘நீயா’ இரண்டாம் பாகம் பழிவாங்கும் பாம்பு கதையில் 3 நடிகைகள்

‘நீயா-2’ படத்தில் வரலட்சுமி, ராய்லட்சுமி, கேத்தரின் தெரெசா தோற்றங்கள். கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா, லதா நடித்து 1979-ல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட படம் ‘நீயா?’.
தனது காதலன் பாம்பை கொன்றவர்களை இச்சாதாரி என்ற பெண் பாம்பு அழகான பெண்ணாக மனித வடிவத்துக்கு மாறி எப்படி பழிவாங்குகிறது என்பது கதை. இதில் ஸ்ரீப்ரியா இச்சாதாரி பாம்பாக நடித்து அவரே படத்தை தயாரித்தும் இருந்தார்.

காதலனை கொன்ற கமல்ஹாசன் நண்பர்களை ஒவ்வொருவராக பாம்பு கொல்வதும் பிறகு கமல்ஹாசனையும் கொல்ல துடிப்பதும் அவர் தப்பினாரா? என்பதும் கதை. நான் கட்டிலின் மேலே கண்டேன் வெண்ணிலா, ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா போன்ற இனிமையான பாடல்கள் படத்தில் இருந்தன.

அந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘நீயா-2’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் ஜெய், ராய்லட்சுமி, வரலட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகியோர் நடிக்கின்றனர். எல்.சுரேஷ் டைரக்டு செய்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, “இந்த படமும் நீயா படம் போன்று பழிவாங்கும் பாம்பு கதைதான். ஆனால் கதை களம் முழுக்க வேறுவடிவத்தில் இருக்கும். வரலட்சுமிக்கு நடனம் தெரியும் என்பதால் அவரை பாம்பாக நடிக்க வைத்து இருக்கிறோம்” என்றார்.

பாம்பு தோற்றத்தை கிராபிக்ஸில் முதல் பாகத்தை விட மிரட்டலாக படமாக்குகின்றனர். இந்த படத்தில் ராய் லட்சுமி, வரலட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகியோரின் முதல் தோற்றங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன.