கேரள வெள்ளத்துக்கு குறைவான நிதி வழங்குவதா? ரூ.4 கோடி கார் வைத்துள்ள நடிகர்கள் மீது ஷீலா பாய்ச்சல்

கேரள வெள்ள நிவாரணத்துக்கு மலையாள நடிகர்-நடிகைகள் பங்களிப்பு குறைவாக இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

Update: 2018-09-02 23:29 GMT
ஒரு படத்துக்கு பல கோடிகள் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களும் ஒரு மாத சம்பளமாக ரூ.40 லட்சம் வரை பெறும் நகைச்சுவை நடிகர்களும் மழை வெள்ள பாதிப்புக்கு சில லட்சங்கள்தான் கொடுத்துள்ளனர் என்று குறை கூறுகிறார்கள்.

இந்த நிலையில் பழம்பெரும் நடிகை ஷீலாவும் மலையாள நடிகர்களை கண்டித்துள்ளார். 1960 மற்றும் 70-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஷீலா. பாசம், பணத்தோட்டம், இதய கமலம், சந்திரமுகி உள்பட பல படங்களில் நடித்தவர். ஷீலா கூறியதாவது:-

“கேரளாவில் வெள்ளத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். ஆனால் மலையாள நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு குறைவான தொகையை வழங்கி உள்ளனர். முன்னணி மலையாள நடிகர்கள் பயன்படுத்தும் கார்களின் விலை ரூ.4 கோடி. ஆனால் அவர்கள் வழங்கிய தொகை சில லட்சங்கள் என்பது வேதனையாக இருக்கிறது. கேரள அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்கிறார்கள். அவர்களை ஒப்பிடும்போது நடிகர்கள் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்க வேண்டாமா?. உங்களுக்கு பெயர் புகழ் பணம் எல்லாவற்றையும் கொடுத்தது ரசிகர்கள்தான். அவர்கள் கொடுத்த பணத்தில்தான் சொகுசாக வாழ்கிறீர்கள்.

இப்போது அந்த மக்கள் வீதியில் நிற்கும்போது நடிகர்கள் அதிக நிதி கொடுத்து உதவி செய்து அவர்கள் பக்கம் நிற்பதுதான் நியாயம். நட்சத்திர கலைவிழா நடத்தியும் நிதி திரட்டலாம்.” இவ்வாறு ஷீலா கூறினார்.

மேலும் செய்திகள்