சினிமா செய்திகள்
படமாகும் எம்.ஜி.ஆர். வாழ்க்கை டிரெய்லர் வெளியிடப்பட்டது

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு படத்தின் டிரெய்லரை எச்.வி.ஹண்டே, சைதை துரைசாமி, வேணுகோபால் எம்.பி., நடிகை லதா ஆகியோர் வெளியிட்டனர். அருகில் டைரக்டர் பாலகிருஷ்ணன்.

மறைந்த முதல்-அமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை எம்.ஜி.ஆர். என்ற பெயரிலேயே சினிமா படமாக தயாராகி வருகிறது. எம்.ஜி.ஆர். வேடத்தில் சதீஷ்குமார் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங்கும், எம்.ஜி.ஆர் அண்ணன் சக்ரபாணியாக மலையாள நடிகர் ரகுவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை அ.பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குகிறார். இவர் ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கையை படமாக எடுத்து வெளியிட்டவர். எம்.ஜி.ஆர். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, டாக்டர் வேணுகோபால் எம்.பி., நடிகை லதா, கவிஞர் பூவை செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:-

“காந்தி, காமராஜர் பெயர்களில் படங்கள் வந்துள்ளன. எம்.ஜி.ஆர். வாழ்க்கையும் படமாவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு மனிதனை கடவுளாக கருத எத்தனை பண்புகள் தேவையோ அத்தனை பண்புகளும் எம்.ஜி.ஆரிடம் இருந்தன. அவர் ஒரு அவதாரம். மனித நேயத்தில் உச்சம் தொட்டவர். சாதி, மதம், இனங்களை கடந்து மனிதர்களை நேசித்தார். முகம் தெரியாதவர்களையும் உறவுகளாக பாவித்தார்.

வறுமையிலும் தனது உணவை மற்றவருக்கு கொடுத்தார். அவரிடம் உதவி பெற்றவர்கள் பட்டியல் அதிகம். 1972-ல் சைதாப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு உணவுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவரிடம் நான் கேட்டபோது நெசவாளர்கள் குடும்பத்துக்கும் சேர்த்து 20 ஆயிரம் பேருக்கு அவர் உணவு வழங்கினார்.

இப்படிப்பட்ட மனித நேயம் உள்ளவரை யாராவது பார்த்தது உண்டா? கஷ்டப்பட்ட முரசொலி மாறனுக்கு எங்கள் தங்கம் படத்தில் நடித்து கொடுத்து உதவினார். மக்களுக்கும் திரையுலகுக்கும் அவர் செய்த பணிகள் ஏராளம். திரைப்படங்களிலும் நல்ல பண்பு உள்ளவராகவே நடித்தார். மதுவை எதிர்த்தார்.

எம்.ஜி.ஆர். ஒரு அற்புதம், அதிசயம், அவதாரம். எம்.ஜி.ஆர் வாழ்க்கையை நிகழ்கால இளைஞர்களும் அரசியல்வாதிகளும் இந்த படம் மூலம் அறிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.” இவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.