சினிமா செய்திகள்
35 வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் வாங்கிய காரில் பயணிக்கும் நடிகர்

முன்னாள் கதாநாயகன் ஒருவர் 35 வருடங்களுக்கு முன்பு வாங்கிய மாருதி 800 காரிலேயே இன்னும் பயணித்து பட உலகினரை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
பல கோடி மதிப்புள்ள சொகுசு கார்களில் நடிகர்கள் வரும் இந்த கால கட்டத்தில் முன்னாள் கதாநாயகன் ஒருவர் 35 வருடங்களுக்கு முன்பு வாங்கிய மாருதி 800 காரிலேயே இன்னும் பயணித்து பட உலகினரை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அவரது பெயர் ராமகிருஷ்ணா. இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை படத்தில் கதாநாயகனாக நடித்தவர்.

காதலே நிம்மதி, நிசப்தம் ஆகிய படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். மாருதி 800 காரை அறிமுகப்படுத்தியபோது முதன்முதலில் அந்த காரை வாங்கிய கன்னட நடிகர் இவர்தான். அப்போது இந்த காருக்கு மவுசு இருந்தது. அதன்பிறகு நிறைய வகை கார்கள் வந்து விட்டன. மாருதியும் புதிய ரக கார்களை வடிவமைத்து விற்பனைக்கு கொண்டுவந்துவிட்டது. ஆனாலும் 35 வருடங்களாக முதன் முதலில் வாங்கிய அந்த மாருதி 800 காரையே ராமகிருஷ்ணா இப்போதும் பயன்படுத்துகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘இது எனக்கு பிடித்தமான கார். 1980–களில் இந்த காரை ஓட்டுவதற்கு நடிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். நடிகர் ரவிச்சந்திரன் இதை நான்கைந்து தடவை வாடகைக்கு எடுத்துச் சென்று இருக்கிறார். அம்பரீசும் தினமும் இதை ஓட்டுவார். சிவராஜ்குமாரும் இதே ரக காரை வாங்கினார். இப்போது இந்த காருக்கு மவுசு இல்லை. ஆனாலும் நான் ஓட்டி வருகிறேன். இந்த காரை ஓட்டுவதில்தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது’’ என்றார்.