பணம் கையாடல் புகார் : தெலுங்கு நடிகர் சங்கம் உடைகிறது?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலிலும், புதிய கட்டிடம் கட்டுவதிலும் தகராறு ஏற்பட்டதுபோல் தெலுங்கு நடிகர் சங்கமான மா அமைப்பிலும் மோதல் வெடித்துள்ளது.

Update: 2018-09-04 23:15 GMT
சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியால் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டது. நடிகர்கள், இயக்குனர்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று அவர் புகார் கூறினார்.

இதனால் ஸ்ரீரெட்டிக்கு நடிகர் சங்கம் தடைவிதித்து தேசிய மகளிர் ஆணையம் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக இறங்கியதும் தடையை நீக்கினர். இப்போது நடிகர் சங்கத்தில் பணம் கையாடல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள டல்லாசில் நடிகர்–நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதில் வசூலான தொகையை முறைகேடு செய்து இருப்பதாக தெலுங்கு நடிகர் சங்க தலைவர் சிவாஜிராஜா மீது பொதுச்செயலாளர் நரேஷ் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து நரேஷ் கூறும்போது, ‘‘அமெரிக்காவில் வசூலான தொகை பற்றிய கணக்கு விவரங்களை தெரிவிக்கவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடு ஒப்பந்தங்களை வேண்டியவர்களுக்கு கொடுத்து முறைகேடு செய்துள்ளனர். அரசு அதிகாரிகள், திரையுலகினரை கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்தி முறைகேடுகளை கண்டுபிடிக்க வேண்டும்’’ என்றார்.

சிவாஜிராஜா கூறும்போது, ‘‘நடிகர் சங்க நிதியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. தவறு நடந்து இருப்பதாக நிரூபித்தால் எனது மொத்த சொத்துக்களையும் கொடுக்க தயார். மொட்டை அடித்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். விரைவில் தேர்தல் நடக்க இருப்பதால் என்னை மீண்டும் போட்டியிடவிடாமல் தடுக்க மோசடி புகார் கூறியுள்ளனர்’’ என்றார்.

இந்த மோதலால் தெலுங்கு நடிகர் சங்கம் உடையும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்