சினிமா செய்திகள்
நகைச்சுவை நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம்

தமிழ் பட உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்த ராக்கெட் ராமநாதன் சென்னை ராயப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் உடல்நிலை மோசம் அடைந்து மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

மறைந்த ராக்கெட் ராமநாதன் பிரபல டைரக்டர் ஆர்.சி.சக்தியால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர். ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது, ஸ்பரி‌ஷம், வளர்த்த கடா, மண்சோறு, கோயில் யானை, நாம், வரம், நந்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் முதன் முதலில் பலகுரலில் பேசிய கலைஞர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், எம்.ஆர்.ராதா, பி.எஸ்.வீரப்பா உள்ளிட்டோர் குரல்களில் பேசி உள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். இவருக்கு பானுமதி என்ற மனைவியும், சாய்குருபாலாஜி என்ற மகனும், சாய்பாலா என்ற மகளும் உள்ளனர். ராக்கெட் ராமநாதன் உடல் நேற்று மாலை கிருஷ்ணாம்பேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘ராக்கெட் ராமநாதன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பல குரல் கலையை அறிமுகப்படுத்தி அதை பிரபலப்படுத்த அயராது உழைத்தவர். அவரது மறைவு கலைத்துறைக்கும், திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.