சினிமா செய்திகள்
பா.ஜ.க சார்பில் போட்டியா? நடிகர் மோகன்லாலுக்கு எதிர்ப்பு

மலையாள பட உலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் பா.ஜனதா கட்சியில் சேரப்போவதாக தகவல்கள் பரவின.
இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி விட்டு திரும்பியதும் இந்த யூகங்கள் வலுத்தன. கேரளாவில் உள்ள வயநாட்டில் நடக்கும் மலையாளிகள் மாநாட்டுக்கு அழைக்கவே பிரதமரை அவர் சந்தித்தார் என்றாலும் இது அவர் அரசியலுக்கு வருவதற்கான முன் ஏற்பாடு என்றே பலரும் பேசினர்.

மோகன்லாலை கட்சியில் இணைத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரசாரத்துக்கு பயன்படுத்தவும் இதற்காக திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட அவருக்கு சீட் வழங்கவும் பா.ஜனதா தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறினர்.

இதுகுறித்து மோகன்லாலிடம் கேட்டபோது, ‘‘பா.ஜனதா சார்பில் திருவனந்தபுரம் தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. எனது அறக்கட்டளை நடத்தும் விழாவுக்கு அழைப்பு விடுக்கவே பிரதமரை சந்திதேன். எனது வேலையை செய்ய விடுங்கள்’’ என்றார்.

திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிதரூரிடம் இது குறித்து கேட்டபோது ‘‘மோகன்லாலுக்கு எனது தொகுதியில் வீடு இருக்கிறது. ஒரு நடிகராக அவரை மதிக்கிறேன். தங்கள் துறையை விட்டு வேறு துறைக்கு யார் வந்தாலும் பிரச்சினைகளை சந்திக்க நேரும்’’ என்றார்.

கேரள காங்கிரஸ் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது ‘‘மோகன்லால் சிறந்த நடிகர். மக்கள் அவரை ரசிக்கிறார்கள். அரசியலுக்கு வரும் தவறை அவர் செய்வார் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.