‘‘நான் எழுதியதில் எனக்கு பிடித்த பாடல்கள்’’ பட விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு

மணிரத்னம் இயக்கி உள்ள புதிய படம் செக்கச் சிவந்த வானம். இதில் அரவிந்தசாமி, சிம்பு, அருண்விஜய், விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், தியாகராஜன், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

Update: 2018-09-06 23:00 GMT
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதி உள்ளார்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியோடு சென்னையில் நடந்தது. விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:–

ஒரு மனிதன் கனவுலகில் வெற்றி–தோல்வி பாதிப்பு இல்லாமல் சமூக மாற்றங்களை தாண்டி 35 வருடங்கள் அதே உணர்ச்சியோடு இருக்க முடிகிறது என்றால் அது மணிரத்னம்தான். இந்த 35 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள் வந்து இருக்கிறது. சமூக விழுமியங்கள் மாறியுள்ளன.

ஆணும் பெண்ணும் கல்யாணம் ஆகுமுன்னே கையை தொடலாகுமா என்று ஒரு பாட்டு. அடுத்த வரி வையம் இதை ஏற்குமா? இப்படி இருந்தது, தமிழ் நாட்டின் விழுமியம். ஆணும் பெண்ணும் காதலிக்கலாம் தொட்டுக்கொள்ளக் கூடாது. 40 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள மாற்றத்தை பாருங்கள்?

இந்த மாற்றங்கள் மத்தியில் ரோஜா, நாயகன் படங்கள் எடுத்த அதே உணர்ச்சியோடும் எழுச்சியோடும் இன்னும் அவர் பணியாற்றுவதை பார்த்து வியக்கிறேன். இந்த படத்தில் எனக்கு பிடித்த வி‌ஷயம் செக்கச் சிவந்த வானம் என்ற தலைப்பு. தலைப்பு வைப்பதற்கு ஒரு ஞானம் வேண்டும். மணிரத்னத்தின் மிகச்சிறந்த படைப்பு ஏ.ஆர்.ரகுமான். எங்கள் கூட்டணியை கால் நூற்றாண்டுக்கு மேலாக ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள்.

அழகாக படமாக்கப்பட்ட எனது மிகச்சில பாடல்கள் எது என்று கேட்டால் மூன்றை சொல்வேன். ஒன்று பாரதிராஜா படத்தில் வரும் ஆயிரம்தாமரை மொட்டுகளே, இரண்டு பாலசந்தரின் படத்தில் வரும் என்ன சத்தம் இந்த நேரம். மூன்றாவதாக மணிரத்னம் படத்தில் இடம்பெற்ற உயிரே உயிரே பாடல்.

ஜெயலலிதா ஏ.ஆர். ரகுமான் ஸ்டூடியோவுக்கு வந்து கேட்ட பாட்டு கண்ணாளனே.

இவ்வாறு வைரமுத்து பேசினார்.

மேலும் செய்திகள்