சினிமா செய்திகள்
தூக்கு தண்டனை கைதியின் கதையை சினிமா படமாக இயக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி

ஓய்வு பெற்ற நீதிபதி மூ.புகழேந்தி. இவர் தமிழ் கவிதைகள், ஆங்கில நாவல்கள் உள்பட 22 நூல்களை எழுதி உள்ளார்.
 2015–ல் சென்னையை உலுக்கிய வெள்ள பாதிப்பையும் புத்தகமாக எழுதி வெளியிட்டு உள்ளார். இப்போது, ‘வேதமானவன்' என்ற படம் மூலம் மூ.புகழேந்தி டைரக்டராகி உள்ளார்.

இவரே இந்த படத்தை தயாரித்தும் இருக்கிறார். இதில் கதாநாயகனாக மனோஜெயந்த், கதாநாயகியாக ஊர்வசி ஜோஷி நடித்துள்ளனர். டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டாமணி, முனையூர் சோனை ஆகியோரும் நடித்துள்ளனர். ஒரு தூக்கு தண்டனை கைதி விடுதலையாகி வருகிறான். அவனை சமுதாயம் ஏற்கிறதா, இல்லையா என்ற கதையம்சத்தில் சஸ்பென்ஸ், அதிரடி, நகைச்சுவை படமாக தயாராகி உள்ளது.

சமுதாயத்துக்கு நல்ல கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக நீதிபதி புகழேந்தி தெரிவித்தார். இந்த படத்துக்கு சவுந்தர்யன் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது.