சினிமா செய்திகள்
உணவகம் தொடங்கும் நடிகை டாப்சி

பிங்க், நாம் சபானா படங்களுக்கு பிறகு இந்தியில் கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார் டாப்சி.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அவரை தேடி வருகின்றன. இப்போது டாப்சி கைவசம் 4 இந்தி படங்கள் உள்ளன. சினிமா வாழ்க்கை பற்றி மனம் திறந்து அவர் கூறியதாவது:–

‘‘தோல்விகளை பார்த்து பயம் இல்லை. படங்கள் தோற்றால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. ஒரு படம்தானே தோல்வி அடைந்தது என்று அடுத்த படத்துக்கு முயற்சி செய்வேன். சினிமா இல்லாவிட்டால் வாழ்க்கை போய்விடாது. வேறு ஏதாவது தொழில் செய்வேன். படங்கள் மட்டும்தான் வாழ்க்கை என்று நினைப்பது இல்லை. அதனால்தான் எப்போதும் மகிழ்ச்சியாகவும், தைரியமாகவும் என்னால் இருக்க முடிகிறது. நல்ல கதைகளை தேர்வு செய்யவும் உதவுகிறது. சினிமாவுக்கு தொடர்பு இல்லாத வி‌ஷயங்களில் ஈடுபட விருப்பம் இருக்கிறது. எனது தங்கையுடன் இணைந்து உணவகம் தொடங்க திட்டமிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது அந்த தொழிலில் ஈடுபடுவேன்.

எதிர்காலத்தில் நான் சினிமாவை விட்டு விலகினால் அதற்கு தொடர்பு இல்லாத பிற தொழில்கள் என் கைவசம் இருக்க வேண்டும். அதற்காகத்தான் உணவகம் தொடங்கும் யோசனை இருக்கிறது. திரையுலகில் யாருடனும் எனக்கு நெருக்கமான நட்பு இல்லை. மற்றவர்களுடன் அதிகமாக பழகுவதும் கிடையாது. என் வேலையை செய்து கொண்டுபோகிறேன். படங்கள் வெற்றி அடைந்தால்தான் இங்கு கொண்டாடுவார்கள்.’’

இவ்வாறு டாப்சி கூறினார்.