‘தி நன்’ படப்பிடிப்பில் நிகழ்ந்த சுவாரசியங்கள்

காஞ்சூரிங் வரிசை திரைப்படங்கள், திகிலிலும், வசூலிலும் மிரட்டின. அதனால் அதன் வரிசைப்படமான ‘தி நன்’ திரைப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

Update: 2018-09-08 05:50 GMT
தமிழகத்தில் நேற்று வெளியான தி நன் படத்திற்கு, தமிழ் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தி நன் திரைப்படம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதோ...

1. ‘தி நன்’ திரைப்படத்தின் வேலைகள் கடந்த வருடம் (2017) பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு, எடிட்டிங், அனிமேஷன் வேலைகளை 27 வாரங்களில் முடித்திருக்கிறார்கள்.

2. இதற்கு முந்தைய திரைப்படங்களான காஞ் சூரிங், அனாபெல் போன்ற திரைப்பட வேலைகளின் போது, படக்குழுவினர் அமானுஷ்ய சக்தியின் நடமாட்டத்தை உணர்ந்திருக்கிறார்கள். அதேபோன்று, தி நன் திரைப் படத்திலும் அமானுஷ்ய சக்தியின் நடமாட்டம் இருந்ததாம். இதனால் படப்பிடிப்பு தளங்களில் அடிக்கடி கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

3. தி நன் திரைப்படத்தில் வரும் ‘வாலக்’ என்ற கதாபாத்திரம், கற்பனையாக உருவாக்கப்பட்டது அல்ல. அத்தகைய தீயசக்தி இருப்பதாக, வெளிநாடுகளில் நம்புகிறார்கள். அதை அடிப்படையாக வைத்தே, வாலக் கதாபாத்திரம், தி நன் திரைப்படத்தில் பயமுறுத்தி வருகிறது.

4. தி நன் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும், ரோமானியாவின் டிரன்சல்வேனியாவில் நடத்தப்பட்டது. குறிப்பாக, டிரன்சல்வேனியாவில் இருக்கும் டிராகன் கோட்டையில் பெரும்பாலான காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

5. ‘தி நன்’ திரைப்படத்திற்காக பிரத்யேக பாடல் ஒன்றை எழுதி இசையமைத்திருக்கிறார்கள். இந்த பாடல் வரிகளில், தி நன் திரைப்படத்திற்காக பணியாற்றிய ஊழியர்களின் பெயர்களையும், அவர்களது பணி விவரங்களையும் சேர்த்திருக்கிறார்கள்.

6. ரோமானியாவில் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து, அமெரிக்க திரும்புகையில் ரோமானியா சாலைகளில் பராமரிப்பின்றி இருந்த ஒரு நாயையும், ஒரு பூனையையும் எடுத்து சென்றிருக்கிறார்கள். தற்போது அந்த நாயும், பூனையும் இயக்குனர் ஹார்டி வீட்டில் வளர்கிறது.

7. படப்பிடிப்பின் போது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன. அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் ஒருபுறமிருக்க, விலங்குகளின் அட்டகாசமும் நிகழ்ந்திருக்கிறது. குறிப்பாக ‘வாலக்’ கதாபாத்திரத்தின் காட்சிகள் படமாகும்போது, வவ்வால்களின் தொல்லை அதிகமாக இருந்ததாம். வவ்வால்களிடமிருந்து வாலக் கதாபாத்திரமாக நடித்த போனி ஆரோன்ஸை காப்பாற்றுவதே, படப்பிடிப்பு குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.

8. வாலக் கதாபாத்திரத்தில் நடித்த போனி ஆரோன்ஸிற்கு, பலதரப்பட்ட தேர்வுகளுக்கு பிறகே வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட நடிகைகளிடம் தேர்வு நடத்திய பிறகே, போனியை வாலக்காக நடிக்க வைத்திருக்கிறார்கள்.

9. வாலக் கதாபாத்திரமாக நம்மை பய முறுத்தும் போனி ஆரோன்ஸ், மிகவும் பயந்த சுபாவம் கொண்டவராம். அதனால் படப் பிடிப்பு முடிந்து, இரவு தூங்க செல்வதற்கு முன்பு, அரை மணி நேரம் இறைவழிபாடு நடத்துவாராம்.

10. தி நன் திரைப்படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள், இயக்குனர் ஹார்டியின் சொந்த அனுபவம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிறுவயதில் அனுபவித்த அமானுஷ்ய உணர்வுகளையும், அவரது நண்பர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையுமே தி நன் திரைப்படமாக எடுத்திருக்கிறார்.

மேலும் செய்திகள்