சினிமா செய்திகள்
மன அழுத்தம் பற்றி பேசிய தீபிகா படுகோனே

மன அழுத்தம் பற்றி பேசிய தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இவருக்கு நடிகர் ரன்வீர் சிங்குடன் நவம்பர் மாதம் திருமணம் நடக்க உள்ளது. இந்த நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், மன அழுத்த நோயில் இருந்து மீண்டது பற்றி பேசினார். அவர் கூறியதாவது:-

“நான் மன அழுத்த நோயில் சிக்கி மிகவும் பாதிக்கப்பட்டேன். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் மகிழ்ச்சி ஏற்படவில்லை. பெயருக்கு வாழ்ந்த மாதிரியே இருக்கும். எனது அம்மாதான் மன அழுத்தம் இருப்பதை கண்டுபிடித்தார். மன நல ஆலோசகரிடம் அழைத்து சென்றார். என்னை அவர் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

கஷ்டப்பட்டுதான் அதில் இருந்து மீண்டேன். மீண்டும் மன அழுத்தம் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் இருக்கிறது. அந்த மோசமான அனுபவம் ஏற்படவே கூடாது. இதற்காகவே எண்ணங்களை கட்டுப்படுத்தும் பயிற்சி செய்து வருகிறேன். மன அழுத்தம் ஏற்படும்போது மூச்சை இழுத்து விடுகிறேன். நன்றாக தூங்குகிறேன்.

இப்போது எந்த பாதிப்பும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மன அழுத்தம் இருப்பவர்கள் வெளியே சொல்ல வெட்கப்பட வேண்டாம். தகுந்த நேரத்தில் சிகிச்சை பெற்றால் சரிசெய்து விடலாம்.”

இவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.