சினிமா செய்திகள்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை

சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தமிழ் நாட்டில் பிறந்து இந்தி பட உலகில் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, இந்தியில் 300 படங்களில் நடித்துள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்தி பட தயாரிப்பாளர் போனிகபூரை மணந்த இவருக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் துபாய் சென்று இருந்தபோது அங்குள்ள ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி மரணம் அடைந்தார்.

இது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஆவண படமாக தயாராகிறது. சினிமா படமாக எடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. ஸ்ரீதேவியை பெருமைப்படுத்தும் வகையில் சுவிட்சர்லாந்தில் அவருக்கு சிலை வைக்கிறார்கள். ஸ்ரீதேவி நடித்து 1989-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சாந்தினி படம் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.

ராஜ்கபூர் நடித்துள்ள சங்கம் முதன்முதலில் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்ட இந்திய படம். அதன்பிறகு இந்தி திரையுலகினருக்கு பிடித்தமான படப்பிடிப்பு பகுதியாக சுவிட்சர்லாந்து மாறியது. நிறைய இந்தி படப்பிடிப்புகள் அங்கு நடந்துள்ளன. இந்தியர்கள் அதிகமாக அந்த நாட்டுக்கு சுற்றுலா செல்கிறார்கள். மேலும் இந்திய சுற்றுலா பயணிகளை கவர சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்கிறார்கள்.

இதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள ஒரு கடையில் ஸ்ரீதேவியின் உருவப்பொம்மையை வைத்து இருந்தனர். அது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.