“சாதி முரண்களுக்கு எதிரான படங்களை எடுப்பேன்” - டைரக்டர் ரஞ்சித்

“சாதி முரண்களுக்கு எதிரான படங்களை எடுப்பேன்” - டைரக்டர் ரஞ்சித்

Update: 2018-09-10 22:00 GMT
ரஜினிகாந்த் நடித்த கபாலி, காலா படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தனது நீலம் புரொடக்‌ஷன் பட நிறுவனம் சார்பில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவினர் சென்னையில் பேட்டி அளித்தனர். அப்போது பா.ரஞ்சித் கூறியதாவது:-

“எனக்கு முன்னோடியாக அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார். அவருடைய கனவு என்பது மனித சமூகத்தினையுடைய மாண்பை மீட்டெடுப்பதாக மட்டுமே இருந்தது. அது சுயசாதி பெருமை பேசுவதோ, ஆண்ட சாதி பெருமை பேசுவதோ கிடையாது.

திரைப்படங்கள் மூலமாக மனித சமூகத்தில் இருக்கிற ஏற்றத் தாழ்வை, சாதி முரணை உடைப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் நான் பயன்படுத்துவேன். அதுபோன்ற திரைப்படங்களை வடிவமைக்கிறேன். என் மீது இதனால் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவதூறுகளை புறந்தள்ளுவேன்.

சமூக முரண்களுக்கு எதிரான திரைப்படம் தான் ‘பரியேறும் பெருமாள்.’ எனது பேச்சுகள் ஒரு சாதிவெறியனாக என்னை நினைக்க வைத்திருக்கும். சாதியை எதிர்த்து வருகிற ஒருவனை சாதிவெறியனாக மாற்றுகிற சூழல்தான் சமூகத்தில் இருக்கிறது.

யாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல, அவர்களது கையைக் கோர்த்து பக்கத்தில் அமர்ந்து உரையாடுவதைத்தான் நான் விரும்புகிறேன். அந்த வேலையை பரியேறும் பெருமாள் நிச்சயமாக செய்யும்.”

இவ்வாறு பா.ரஞ்சித் பேசினார். டைரக்டர் ராம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், டைரக்டர் மாரி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்