சினிமா செய்திகள்
செக்யூரிட்டியாக பணியாற்றும் சினிமாவை மிரட்டிய கவர்ச்சி வில்லி பிரமிளாவின் மறுபக்கம்

நடிப்புக்கு முழுக்குபோட்ட பின் அமெரிக்காவில் 25 வருடம் செக்யூரிட்டியாக பணிபுரிந்ததாக அரங்கேற்றம் படத்தில் நடித்த நடிகை பிரமிளா தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரமிளா.

அந்த படத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபடும் வேடத்தில் நடித்தார். இந்த வேடம் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் பிரமிளாவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது.

பிரமிளா தொடர்ந்து கதாநாயகி, கவர்ச்சி வேடம், வில்லி என பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

பின்னர் டிவியில் நடித்து வந்தார். அதன்பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கே அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றுவதாக செய்தி வந்தது.

பிரமிளா இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது...

“அண்ணன் மாப்பிள்ளை பார்த்து நடத்திய திருமணம் இது. அவர் அமெரிக்கர் என்பதால் லாஸ் ஏஞ்சலிலேயே குடியேறிவிட்டேன். அமெரிக்க டாலர் நோட்டுகள் அச்சடிக்கும் சென்ட்ரல் கவர்ன்மென்ட் நிறுவனத்தில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக 25 வருடங்கள் வேலை பார்த்தேன்.

அச்சடித்த டாலர் நோட்டுகளை டிரக் மூலம் பாதுகாப்பாக வங்கிகளில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். இதற்குப் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் பள்ளி இருக்கிறது. அதில், இரண்டு வருட பயிற்சி முடித்து, நுழைவுத்தேர்வில் தேர்வாக வேண்டும்.

துப்பாக்கியால் சுடுவதற்கு, டாலர் நோட்டுகளை எடுத்து செல்லும் டிரக்கை ஓட்டுவதற்கு, யாராவது டிரக்கை வழிமறித்தால் அட்டாக் செய்து கைதுசெய்வதற்கு எனப் பயிற்சி அளித்தார்கள். இத்துடன், ‘கிரிமினல் சட்டம்‘ மற்றும் ‘சிவில் சட்டம்’ படிக்க வேண்டும். இதில், முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றேன். கை நிறையச் சம்பளம், விதவிதமான அனுபவம் எனச் சந்தோ‌ஷமாக இருந்தது.

இப்போது ஓய்வு பெற்றுள்ளேன். எங்கள் வீட்டுக்குப் பின்னால், 2 ஏக்கரில் பழத்தோட்டம் போட்டிருக்கிறேன். வேட்டையாடுவதற்கு லைசென்ஸ் வைத்திருக்கிறேன். கை நிறைய ஓய்வூதியம், வேட்டை, விவசாயம், கணவருடன் காதல் என வாழ்க்கை சுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்