‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது

ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படம் ரூ.450 கோடியில் தயாராவதாக கூறப்பட்டது. தற்போது ரூ.542 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

Update: 2018-09-11 23:45 GMT
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே படம் வெளியாகும் தேதிகளை அறிவித்து தள்ளிவைத்து விட்டனர். 

கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்றனர். வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர். நவம்பர் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். 

இந்த நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் நாளை விநாயகர் சதுர்த்தியில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் 3 டியில் வெளியாகும் என்றும் அதே நேரத்தில் யூடியுப்பில் 2 டியில் வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். இது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

2.0 படத்தின் டிரெய்லரை தணிக்கை செய்யும்போது பார்த்த ஒருவர் பாகுபலியை மிஞ்சுவதாக உள்ளது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த படம் ரூ.450 கோடி செலவில் தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் படத்தின் செலவு குறித்த புதிய போஸ்டரை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். அதில் இந்தியாவிலேயே முதல் முறையாக வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட படம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்திய பணமதிப்பில் 75 மில்லியன் டாலர் என்பது ரூ.542 கோடிக்கு அதிகம். இதனால் வியந்து போன ரசிகர்கள் அந்த போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இயக்குனர் ‌ஷங்கரும் தனது டுவிட்டரில் 2.0 படத்தில் பிரமாண்டத்தை கொண்டுவர 3 ஆயிரம் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்