பட்டைய கிளப்பு
4 காதல் ஜோடிகளுடன் டான்ஸ் மாஸ்டர் மஸ்தான் இயக்கும் ‘பட்டைய கிளப்பு’ சினிமா முன்னோட்டம்.;
பிரபல டான்ஸ் மாஸ்டர்கள் தங்கப்பன், பிரபுதேவா, ராஜுசுந்தரம், ராகவா லாரன்ஸ், தினா, ஹரிகுமார் ஆகியோரை தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் மஸ்தானும் டைரக்டர் ஆனார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில், 500 படங்களில், 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்தவர், இவர். ஏற்கனவே 2 படங்களை இயக்கிய இவர் மூன்றாவதாக, ‘பட்டைய கிளப்பு’ என்ற பெயரில் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
“படித்த 4 இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் பிரச்சினையில் முடிகிறது. ஊரில் இவர்களுக்கு ஆதரவாக யாரும் இல்லாத நிலை ஏற்படுகிறது. 4 பேரும் கூடிப்பேசி, பணம் சம்பாதித்து, உதாசினப்படுத்திய ஊருக்குள் வந்து எங்களாலும் சாதிக்க முடியும் என்று நிரூபிக்க வேண்டும் என சபதம் எடுக்கிறார்கள். அந்த சபதம் என்ன ஆனது என்பதே கதை.
கேரள கல்லூரி மாணவி சித்ரா, பெங்களூரு மாடல் அழகி லட்சுமி பாலா, திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா, சிங்கம்புலி, இமான் அண்ணாச்சி, போண்டா மணி, உமா ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக் கிறார்கள். ராதாகிருஷ்ணன் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு இம்மாதம் சென்னையில் தொடங்கி, பழனி, ஏற்காடு, சாலக்குடி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது”.