தைரியத்தால் உயர்ந்து நின்ற இந்திரா
பெண்ணுக்கு உரியதாகக் கூறப்பட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்டவராக விளங்கினார் இந்திரா. நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகள் போன்றவற்றை துணிச்சலோடு மேற்கொண்டார்.;
இந்தியாவின் முதல் பெண் பிரதமர், இந்திரா பிரியதர்ஷினி காந்தி. இளம் வயதிலேயே தாயை இழந்தவர். இவரது தந்தை ஜவஹர்லால் நேரு சுதந்திரப் போராட்டத்தின் காரணமாக பல காலம் சிறையில் இருந்ததால், இந்திராவுக்கு தந்தையின் அன்பும் முழுமையாக கிடைக்கவில்லை. துணிச்சலும், தெளிவான சிந்தனையும், திட்டமிடுதலும் இவரது பலமாக இருந்தன.
பெண்ணுக்கு உரியதாகக் கூறப்பட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்டவராக விளங்கினார் இந்திரா. அரசியலில் ஆர்வம் கொண்ட இந்திரா 1966-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். எத்தனை எதிர்ப்புகள் எழுந்தாலும் அவற்றை லாவகமாக கையாண்டு தன்னை மேலும் வலிமையாக்கிக் கொண்டார்.
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் போர் நடவடிக்கைகள், தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள், நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தும் வளர்ச்சி நடவடிக்கைகள் போன்றவற்றை துணிச்சலோடு மேற்கொண்டார். வங்கிகளை தேசியமயமாக்கி பாகுபாட்டை உடைத்தார்.
விவசாயத்தின் வளர்ச்சியான பசுமை புரட்சிக்கு வித்திட்டார். அணுசக்தி துறையில் மேம்பட்ட நாடாக இந்தியாவை உருவாக்கினார். ஆதிக்க சக்திகளுக்கு அடிபணிய மறுத்தார். மற்ற நாடுகளுடன் நட்புறவை பேணி பொருளாதாரத்தை மேம்படுத்தினார்.
1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி தனது மெய்க்காவலர்களால் சுடப்பட்டு மரணம் அடைந்தார். வாழ்ந்தபோதும், இறந்த பின்பும் தைரியமான தலைவர்களின் பட்டியலில் இவரது பெயர் நிலைத்து இருக்கிறது.
தோல்வியைக் கண்டு இவர் துவண்டது இல்லை.
எதிர்ப்புகளைக் கண்டு மிரண்டது இல்லை. சிக்கலான தருணங்களில் தைரியமாக முடிவெடுத்தார். பிறரின் விமர்சனங்களுக்கு அஞ்சாமல், தான் கொண்ட கடமையில் செம்மையாக செயல்பட்டார்.
இன்றைய காலகட்டத்தில் பல தருணங்களில் இத்தகைய குணங்கள் பெண்களுக்கு அவசியமானவை. இந்திராவின் துணிச்சலான வாழ்க்கை வரலாறு, பல பெண்களுக்கு பாடமாக இருக்கும்.