மக்களின் இசைக்கருவி ‘பறை'-சந்திரிகா

இது ஆதித்தமிழரின் இசைக்கருவியாக இருந்தபோதும், எல்லோரிடத்திலும் சென்று சேரவில்லை. ஏனென்றால், பறையை அமங்கல இசைக்கருவியாக ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது.;

Update:2021-10-08 17:39 IST
கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த சந்திரிகா, பறை இசைக்கருவியோடு 500-க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார். 

இவர் 22 வயதிற்குள் ஏராளமான விழிப்புணர்வு நாடகங்களை நடத்தியவர். பல மாணவ-மாணவிகளுக்குப் பறை இசை வகுப்பையும் நடத்துகிறார். அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை..

“என் பெற்றோர் பழனிச்சாமி-சாந்தாமணி, தினக்கூலி களாக வேலை செய்கிறார்கள். கல்லூரியில் வேதியியல் துறையைத் தேர்ந்தெடுத்து படித்தேன். தங்கப்பதக்கம் பெற்றேன். படித்துக் கொண்டிருந்தபோதே நாடகக் கலையில் ஆர்வம் ஏற்பட்டது. தமிழ்த்துறை பேராசிரியர் ராம்ராஜின் தூண்டுதலால் நாடகம் பயில ஆரம்பித்தேன்.

அதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அவருடன் பயணம் செய்தேன். இதுவரை ‘நாற்காலி', ‘கூந்தலில் வழியும் கனவுகள்', ‘பெத்தவன்' மற்றும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது நடத்திய ‘மிதக்கும் உடல்கள்' போன்ற நாடகங்களை அரங்கேற்றம் செய்துள்ளோம்.

இந்தப் பயணத்தின் மூலம்தான் பறை இசைக்கருவி எனக்கு அறிமுகம் ஆனது. பறையில் பல வகை உள்ளன. பறை, நாடகம் நடத்துவதற்கு மட்டுமில்லாமல், பின்னணி இசைக்கவும் உதவும்.

இது ஆதித்தமிழரின் இசைக்கருவியாக இருந்தபோதும், எல்லோரிடத்திலும் சென்று சேரவில்லை. ஏனென்றால், பறையை அமங்கல இசைக்கருவியாக ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள். ஆனால் அது உண்மை கிடையாது. பறை, அன்றைய மக்களின் வாழ்வில் நிறைய இடங்களில் பயன்பட்டிருக்கிறது. எனவே பறையை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

பறை இசைப் பள்ளி மூலம், வார இறுதிகளில் வகுப்புகளைத் தொடங்கினோம். 7 வயதிலிருந்து 65 வயது வரை பலரும் பயிற்சி எடுத்தனர். பல அரசுப் பள்ளிகளில் இலவசமாக பறை இசையைக் கற்றுக் கொடுக்கிறோம்.

கஜா புயல் நிவாரணத்துக்காகவும், பெண் விடுதலை, தீண்டாமை போன்ற கருத்துக்களை முன்வைத்தும் முக்கியமான இடங்களில் நாடகங்கள் நடத்தினோம். தஞ்சாவூரில் நம்மாழ்வாரின் இயற்கை வேளாண் பண்ணையிலும் அரங்கேற்றம் செய்திருக்கிறோம். ‘செந்நாய்’ என்ற திரைப்படத்திலும் நான் நடித்திருக்கிறேன்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், திருப்பூர் தமிழ் பட்டறையிலிருந்து ‘சமூக பேரொளி’ விருதும், தி ரோட்ராக்ட் டிஸ்ட்ரிக்ட் ஆர்கனைசேஷன் மூலமாக ‘தி இன்பேக்ட் மேக்கர் ஆப் த சொசைட்டி’ விருதும் பெற்றுள்ளேன்.

பறையைப் பரவலாக்க வேண்டும். கிடார், பியானோ வாசிப்பது போல் பறையையும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை” என்றார் சந்திரிகா.

மேலும் செய்திகள்