மாவட்ட செய்திகள்
கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

தர்மபுரி அருகே வழித்தட தகராறில் தரக்குறைவாக பேசியதால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தர்மபுரி,


தர்மபுரியை அடுத்த ஏ.ரெட்டிஅள்ளியை சேர்ந்தவர் மாதையன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மகள் வித்யாஸ்ரீ (வயது 21). தர்மபுரி அரசு கல்லூரியில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். மாதையனின் பக்கத்து வீட்டில் ராஜேந்திரன் (61) என்பவர் வசித்து வருகிறார். மாதையன் மற்றும் ராஜேந்திரன் குடும்பத்தினரிடையே வழித்தட பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த வித்யாஸ்ரீ மற்றும் அவருடைய தாயார் லதா ஆகியோரை அருகே வசிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் இரண்டு குடும்பத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மாதையன் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் குடும்பத்தை சேர்ந்த சிலர் மாணவி வித்யாஸ்ரீயையும், அவருடைய தாயார் லதாவையும் தரக்குறைவாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மனமுடைந்த வித்யாஸ்ரீ நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் உடல் கருகிய வித்யாஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த நிலையில் நேற்று தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி வித்யாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர், உடன் படித்த மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். வித்யாஸ்ரீ தீக்குளித்து தற்கொலை செய்தது தொடர்பாக மாதையன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த தர்மபுரி டவுன் போலீசார், ராஜேந்திரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.