மாவட்ட செய்திகள்
கர்நாடக அரசு தாக்கல் செய்த ஆவணங்களை திருப்பி அனுப்ப வேண்டும், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள ஆவணங்களை மத்திய அரசு திருப்பி அனுப்ப வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத் துறையிடம் தாக்கல் செய்துள்ள அம்மாநில அரசு, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியுள்ளது. கர்நாடகத்தின் இக்கோரிக்கையை ஆய்வு செய்யப்போவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது; ஏற்றுக்கொள்ள முடியாது.

கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள சாத்தியக்கூறு அறிக்கை குறித்து பல்வேறு துறைகளிடம் மத்திய அரசு கருத்துகளை கேட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, மேகதாது அணை குறித்து மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்கரியை கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கடந்த சில நாட்களுக்கு முன் சந்தித்து பேசியதாகவும், அப்போது மேகதாது அணை சிக்கல் குறித்து தமிழக, கர்நாடக முதல்-மந்திரிகளிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக நிதின்கட்கரி வாக்குறுதி அளித்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இவை அனைத்துமே தமிழகத்துக்கு எதிரானவையாகும்.

மேகதாது அணை தொடர்பாக இரு மாநில முதல்-மந்திரிகளையோ, அதிகாரிகளையோ அழைத்துப் பேச மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது. மேகதாது அணைக்கு கடைமடை மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அந்தக் கடமையை அம்மாநில அரசு தான் செய்ய வேண்டுமே தவிர, அதன் பிரதிநிதியாக மத்திய அரசு செயல்படக்கூடாது.

தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு பலமுறை ஆணையிட்டும் அதை கர்நாடகம் செயல்படுத்தவில்லை. அப்போது மத்திய ஆட்சியாளர்கள் கர்நாடக அரசிடம் பேசி, தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்றுக் கொடுத்திருந்தால் மத்திய அரசின் நடுநிலையை பாராட்டியிருக்கலாம். அப்போதெல்லாம் வாய்மூடி அமைதியாக இருந்த மத்திய அரசு, இப்போது மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தை வளைக்க முயல்வது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் இழைக்கப்படும் துரோகமாகும்.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுவதை மத்திய அரசு கைவிட வேண்டும். மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களையும் திருப்பி அனுப்ப வேண்டும். மேகதாது குறித்து பேச்சு நடத்துவதற்காக மத்திய அரசுத் தரப்பில் இருந்தோ, கர்நாடக அரசுத் தரப்பில் இருந்தோ விடுக்கப்படும் அழைப்புகளை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்