மாவட்ட செய்திகள்
வீராணம் ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியில் தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
காட்டுமன்னார்கோவில், 

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருணாகரநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரத்தினம் மகன் பாலமுருகன்(வயது 38), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரமா(35). இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் பாலமுருகன் நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக வீராணம் ஏரிக்கரைக்கு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பாலமுருகனை உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடினர்.

இந்த நிலையில் பழஞ்சநல்லூர் எல்லைக்குட்பட்ட வீராணம் ஏரிக்கரை பகுதியில் தண்ணீரில் பாலமுருகன் கிடப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அவர் அங்கு பிணமாக கிடந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் பாலமுருகனின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பாலமுருகனின் உடலை பார்த்து அவரது மனைவி ரமா, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரித்தனர்.

விசாரணையில் காலையில் இயற்கை உபாதை கழித்து விட்டு கை, கால் கழுவ வீரணாம் ஏரியில் இறங்கிய போது தவறி விழுந்து பாலமுருகன் இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவரது மனைவி ரமா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.