மாவட்ட செய்திகள்
‘நீங்கள் விரும்பும் பெண்ணை கடத்தி வருவேன்' பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

உறியடி திருவிழாவில் கலந்து கொண்ட இளைஞர்களிடம் ‘நீங்கள் விரும்பும் பெண்ணை கடத்தி கொண்டு வருவேன்' என பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,

மும்பையில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் ‘தஹிஹண்டி’ எனப்படும் உறியடி நிகழ்ச்சிகள் நடந்தன. காட்கோபரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம் ஏற்பாட்டில் உறியடி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் ராம் கதம் பேசினார். அவர் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர்களை நோக்கி பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நீங்கள் (இளைஞர்கள்) எந்த ஒரு வேலைக்காகவும் என்னை சந்தித்து பேசலாம். எப்போது வேண்டுமானாலும் என்னை தொலைபேசியில் அழைக்கலாம்.

தாங்கள் விரும்பும் பெண்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள் என பல இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் நூறு சதவீதம் இதில் உதவி செய்வேன். நீங்கள் உங்களது பெற்றோரை அழைத்து கொண்டு என்னிடம் வாருங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணை அவர்களுக்குப் பிடித்து விட்டால், அந்த பெண்ணை நான் கடத்தி கொண்டு வந்து உங்களிடம் கொடுத்து விடுகிறேன்.

என்னுடைய செல்போன் எண்ணை குறித்து வைத்து கொள்ளுங்கள். (தனது செல்போன் எண்ணையும் ராம் கதம் கூட்டத்தில் தெரிவித்தார்).

இவ்வாறு அவர் பேசினார்.

ராம் கதமின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ காட்சி நேற்று வைரலாகியது. அவரது இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்து உள்ளன.

பெண்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து தெரிவித்த ராம்கதம் எம்.எல்.ஏ.வை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் வலியுறுத்தி உள்ளார்.

யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே கூறுகையில், “விருப்பத்துக்கு மாறான அரசு அமைப்பது போல பெண்கள் திருமண விஷயத்திலும் பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்து கூறியுள்ளார். மராட்டிய மண்ணில் அவர் எம்.எல்.ஏ. ஆக இருப்பது வெட்கக்கேடு. உடனே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருப்பதற்காக அவர் மீது உள்துறை இலாகாவை தன் வசம் வைத்திருக்கும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், ‘‘ராம் கதம் பெண்களை கடத்துவது பற்றி பேசியிருக்கிறார். அவர் பேசியிருப்பது பா.ஜனதாவின் ராவணன் முகத்தை காட்டி உள்ளது. எனவே ராம் கதம் ‘ராவணன் கதம்' என்றே அழைக்கப்பட வேண்டும்’’ என்றார்.

இது தொடர்பாக ராம்கதம் எம்.எல்.ஏ.விடம் கேட்ட போது, நான் அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசவில்லை, என்னுடைய பேச்சு திரிக்கப்பட்டு உள்ளது என்றார்.