மாவட்ட செய்திகள்
கழுகுமலையில் பரிதாபம் மலையில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலைதந்தை கண்டித்ததால் சோக முடிவு

கழுகுமலையில் மலையில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். தந்தை கண்டித்ததால் மனமுடைந்த அவர் இந்த சோகமுடிவை தேடி கொண்டதாக கூறப்படுகிறது.
கழுகுமலை, 

கழுகுமலையில் மலையில் இருந்து குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். தந்தை கண்டித்ததால் மனமுடைந்த அவர் இந்த சோகமுடிவை தேடி கொண்டதாக கூறப்படுகிறது.

வெல்டிங் தொழிலாளி 

கழுகுமலை ஏ.பி.சி. நகரைச் சேர்ந்தவர் பரமசிவம். தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு 3 மகன்கள். 2–வது மகன் மாரிமுத்து (வயது 22), அப்பகுதியில் உள்ள பட்டறையில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனை தந்தை பரமசிவம் கண்டித்தார்.

மலையில் இருந்து... 

இதனால் மனமுடைந்த காணப்பட்ட மாரிமுத்து நேற்று காலையில் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் மலையின் பக்கவாட்டில் வெயிலுகந்தம்மன் கோவில் அருகில் உள்ள பாறையின் வழியாக சுமார் 100 அடி உயரத்தில் உள்ள மலையில் ஏறினார். பின்னர் அவர் அங்கிருந்து திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்த வழியாக கோவிலுக்கு சென்றவர்கள் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் என்ன? 

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்த மாரிமுத்துவின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில்,‘ வேலைக்கு செல்லாமல் இருந்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த அவர், மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.