மாவட்ட செய்திகள்
ஊத்துக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு தொழிலாளி மயக்கம் அடைந்தார்.
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட பால்ரெட்டிகண்டிகை கிராமத்தில் சிலர் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி கொண்டனர். இப்படி வீடுகள் கட்டி கொண்டதால் ஊத்துக்கோட்டை ஏரியில் இருந்து அருகே உள்ள பேரண்டூர் ஏரிக்கு பாசன கால்வாய் வழியாக நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதே கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கோர்ட்டு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பரிந்துரைப்படி ஊத்துக்கோட்டை தாசில்தார் இளங்கோவன், வருவாய் ஆய்வாளர் ரவி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகன், இளநிலை பொறியாளர் பிருத்தி பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் பாலு ஆகியோரின் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றபோது ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றிகொள்ள நேற்று வரை அவகாசம் வழங்கப்பட்டது.ஆக்கிரமிப்புகளை தானாக அகற்றிகொள்ளவில்லை என்றால் 5–ந் தேதி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று தாசில்தார் இளங்கோவன் எச்சரித்தார். இந்த நிலையில் நேற்று காலை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டனர்.பால்ரெட்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சுப்பிரமணி (வயது 70) சுமார் 50 ஆண்டுகளாக வசித்து வந்த குடிசையை இழக்க உள்ளோமே என்று ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார்.இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தரணி (32), அதிகாரிகள் தன்னுடைய குடிசையை இடிக்கப்போகின்றனர் என்ற கவலையில் இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தார். மேலும் சுப்பிரமணி இறந்துபோனார் என்ற செய்தி கேட்ட உடன் தரணி மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சுப்பிரமணிக்கு மல்லிகா (62) என்ற மனைவியும், ரஜேந்திரன், ராமன் என்ற மகன்களும் உள்ளனர்.