மாவட்ட செய்திகள்
மாயமான பெண் மணப்பாறை தோழி வீட்டில் இருந்த போது சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

எம்.எல்.ஏ.வுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மாயமான பெண் மணப்பாறை தோழி வீட்டில் இருந்த போது சிக்கியது எப்படி? என்ற பரபரப்பான தகவல் கிடைத்து உள்ளது.
மணப்பாறை,

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. ஈஸ்வரன்(வயது 43). இவருக்கும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியார் நகரைச் சேர்ந்த சந்தியா(23) என்ற எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வருகிற 12-ந் தேதி இவர்கள் திருமணம் நடைபெற உள்ளதாக திருமண அழைப்பிதழ்கள் அச்சிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த திருமணத்தில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வந்தது.

போலீசில் புகார்

இந்நிலையில் மணப்பெண் சந்தியா திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் வேதனை அடைந்த பெண்ணின் குடும்பத்தினர் இதுதொடர்பாக கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். சந்தியாவின் தாய் தங்கமணி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ஏற்கனவே சந்தியா திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி அருகே உள்ள கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்(25) என்பவரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் விக்னேசை பிடித்தனர். பின்னர் அவர் மூலம் சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அழைத்து வர முடிவு செய்தனர். அதன்படி முதலில் சந்தியாவின் செல்போன் சிக்னல் மூலம் அதற்கான பணியை தொடங்கினர். அப்போது திருச்சி மாவட்டம், மணப்பாறையில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது. இதையடுத்து போலீசார் அதிரடியாக வந்து விசாரித்த போது மணப்பாறை முத்தன்தெரு குடியிருப்பு பகுதியில் தோழி ஒருவரின் வீட்டில் சந்தியா இருப்பது தெரிய வந்தது. ஆனால் தோழியின் வீடு எது என்று போலீசாருக்கு தெரியவில்லை.

மடக்கி பிடித்தனர்

இதனால் போலீசார் விக்னேசிடம், சந்தியாவிடம் பேசி ஏதாவது ஒரு இடத்திற்கு வரும்படி கூறினர். அதன்படி விக்னேஷ் சந்தியாவுடன் பேசினார். இதையடுத்து சந்தியா அங்கிருந்து விக்னேஷ் கூறிய இடத்துக்கு புறப்பட்டார். அப்போது போலீசார் பின் தொடர்ந்து சென்று விராலிமலை சாலையில் வைத்து சந்தியாவை மடக்கிப் பிடித்தனர். பின்னர் விக்னேசை விட்டு விட்டு, சந்தியாவை அழைத்துக் கொண்டு கோபிச்செட்டிபாளையம் சென்றனர். கோபிச்செட்டிபாளையம் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு பாரதி பிரபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது தனக்கு அந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை என்றும், என்னை விட மாப்பிள்ளைக்கு 20 வயது அதிகம் என்பதால் திருமணம் செய்ய பிடிக்காததால் சென்று விட்டதாகவும் கூறினார்.

இதையடுத்து சந்தியாவை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்த மாஜிஸ்திரேட்டு, எக்காரணம் கொண்டும் திருமணம் செய்ய துன்புறுத்த கூடாது என்று பெற்றோரிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.