மாவட்ட செய்திகள்
வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகை கொள்ளை

ஆத்தூர் அருகே பட்டப்பகலில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆத்தூர், 


சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட அறிஞர் அண்ணா நகர் தெருவில் வசிப்பவர் செந்தில்குமார். இவரது மனைவி கவிதா. சேலம்-சென்னை புறவழிச்சாலையில் உள்ள தென்னங்குடிபாளையம் பகுதியில் நெல்அறுவடை எந்திரம் மற்றும் டிராக்டர்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை கடையை செந்தில்குமார் நடத்தி வருகிறார். இவர் தினமும் காலையிலேயே கடைக்கு சென்று விடுவார்.

இவரது மனைவி கவிதா, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, காலை 11 மணிக்கு கடைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனிடையே நேற்று காலை 11 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு கவிதா கடைக்கு சென்றார். பின்னர் அவர் மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டில் 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 80 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்கார்த்திக் குமார், இன்ஸ்பெக்டர் கேசவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமிர்தலிங்கம், சுந்தராம்பாள் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

தொடர்ந்து சேலத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வியாபாரி செந்தில்குமார் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்த நாய், வெளியே வந்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்கார்த்திக் குமார் நிருபர்களிடம் கூறுகையில், வியாபாரி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 நாட்களில் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்று கூறினார்.