மாவட்ட செய்திகள்
அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம்

அகரம் அரசு மேல் நிலைப்பள்ளியில், தேர்வு மையத்தை மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். கல்வி அதிகாரியையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த செல்லம்பட்டி அருகே அகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 540 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆண்டு பொதுத்தேர்வில் நெடுங்கல், தோப்பூர், சொப்பனூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வெழுதி வருகின்றனர்.

இந்த நிலையில் நெடுங்கல் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வந்து செல்ல போதிய நேரம் கிடைப்பதில்லை எனவும் பள்ளிக்கும் தேர்வு மையத்திற்கும் தூரம் அதிகமாக இருக்கிறது என்றும், இதனால் நெடுங்கல் பகுதியில் புதியதாக தேர்வு மையம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதின் பேரில் அதற்கான பரிந்துரை கடிதம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தேர்வு மையத்தை மாற்ற அகரம் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில் நேற்று பொதுமக்கள் திரண்டு நெடுங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு புதியதாக தேர்வு எழுதும் மையத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், அவ்வாறு வழங்கினால் எங்கள் மாணவர்களை இப்பள்ளியில் இருந்து அழைத்துக்கொண்டு வேறு பள்ளிக்கு செல்ல நேரிடும் என்றும் கூறி பள்ளியின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த நாகரசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் அங்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். தகவலறிந்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜா அங்கு வந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் ஆண்டு பொதுத்தேர்வு மையத்தை மாற்ற எந்த நடவடிக்கையும் இல்லை, அதனால் நீங்கள் கவலைவேண்டாம் என்று கூறினார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு பொதுத்தேர்வு மையம் இல்லாமல் இருந்து வந்தோம். இந்தநிலையில் கடந்த பத்து ஆண்டுகளாக எங்கள் அகரம் பள்ளியில் தேர்வு மையம் இருந்து வருகிறது. இந்த மையத்தை தனியார் பள்ளிக்கு தாரை வார்த்து கொடுப்பது மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக, தெரிவித்தனர்.

இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.