மாவட்ட செய்திகள்
பொன்னை ஆற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொன்னை ஆற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையை கண்டித்தும், அதனை தடுக்கக்கோரியும் சீக்கராஜபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிப்காட்(ராணிப்பேட்டை),


சீக்கராஜபுரம் அருகே உள்ள பொன்னை ஆற்றில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. எனவே மணல் கொள்ளையை கண்டித்தும், அதனை தடுக்கக்கோரியும், மணல் கொள்ளையை தடுக்காத வருவாய்த்துறையினரை கண்டித்தும், திருவலம் புதிய மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததைக் கண்டித்தும் நேற்று சீக்கராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு காட்பாடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரேம்குமார், காட்பாடி சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்பாடி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெகன் வரவேற்றுப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோதி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் செல்வகணபதி, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தினா என்கிற தினகரன், கேசவன், தி.மு.க. கிளை செயலாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பொன்னை ஆற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையை கண்டித்தும், மணல் கொள்ளையை தடுக்கக்கோரியும், வருவாய்த்துறையினருக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷம் எழுப்பினர். முடிவில் சீனிவாசன் நன்றி கூறினார்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீக்கராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனிடம், மணல் கொள்ளையை தடுக்கக் கோரி மனு ஒன்றை கொடுத்தனர்.