மாவட்ட செய்திகள்
கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அகில பாரத மாணவர் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,

அகில பாரத மாணவர் இயக்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், காலம் தாழ்த்தாமல் சரியான நேரத்தில் உதவித் தொகை வழங்குவது அவசியம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழில் தேர்வு எழுதுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் முழு நேர ஊழியர் பாண்டிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரதீபன் மற்றும் நிர்வாகிகள் ராகவேந்திரன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களையும் எழுப்பினர்.