மாவட்ட செய்திகள்
வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி தாசில்தாருக்கு மிரட்டல் போலீஸ் விசாரணை

வாக்காளர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக கூறி தாசில்தாருக்கு மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,

நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடத்தில் 3–வது மாடியில் அகஸ்தீஸ்வரம் தேர்தல் தாசில்தார் பிரிவு இருக்கிறது.

இந்த நிலையில் தேர்தல் தாசில்தார் சேகர் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாசில்தார் சேகரை பார்ப் பதற்காக ஒருவர் வந்தார். அவர், தன்னை ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி என்றும், தம்மத்துக்கோணம் பகுதியில் வசிப்பதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தற்போது வெளியிடப் பட்டுள்ள வாக்காளர் பட்டி யலில் குளறுபடி  இருப்பதாக கூறி தாசில்தார் சேகரிடம் தகராறு செய்துள்ளார். அதோடு மட்டும் அல்லாது தகாத வார்த்தைகள் பேசி மிரட்டிய தாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைப் பார்த்த அலுவலக பணியாளர்கள் உடனே அந்த நபரை பிடித்து வெளியே அனுப்பினர். இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று தாசில்தாரிடம் விசாரித்தனர். பின்னர் தாசில்தாரை மிரட்டியவரை தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இதுபற்றி தாசில்தார் சேகர் நேசமணி நகர் போலீசாரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் தாசில்தாரை மிரட்டியவரின் உருவம் பதிவாகி இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.