மாவட்ட செய்திகள்
துவரங்குறிச்சி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து கணவன்-மனைவி உள்பட 3 பேர் பலி

துவரங்குறிச்சி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
துவரங்குறிச்சி,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த துறைமங்கலம் அருகே உள்ள மணியம்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளையன்(வயது 65). இவரது மனைவி சின்னம்மாள்(58). இந்த தம்பதியினரின் மகன் பிச்சைமணி. இவர் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் பெற்றோரை மதுரைக்கு அழைத்து வரும்படி பிச்சைமணி தனது மனைவியின் சகோதரரான அய்யம்பாளையம் குடித் தெருவைச் சேர்ந்த ஜெயராமனிடம் (33) கூறினார். இதையடுத்து ஜெயராமன் காரில் வெள்ளையன், சின்னம்மாள் ஆகியோரை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு மணியம்பட்டியில் இருந்து புறப்பட்டார்.

காரை ஜெயராமன் ஓட்டினார். கார் நள்ளிரவில் திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி போலீஸ்பகுதி யாகபுரம் என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள சிறிய பாலம் பகுதியில் சுமார் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதால் காரில் இருந்த 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து இதுபற்றி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு சென்றது. அவர்கள் பார்த்த போது தான் காரில் வந்த 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரியவந்ததை அடுத்து துவரங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் துவரங்குறிச்சி போலீசாரும் ஆம்புலன்ஸ் பணியாளர்களுடன் சேர்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரின் உடல்களையும் கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் காரில் வந்த 3 பேருமே உயிரிழந்ததால் அவர்கள் யார்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அதன் பின்னர் இறந்த ஜெயராமனின் சட்டைப் பையில் இருந்த டிரைவிங் லைசென்ஸ் மற்றும் காரில் இருந்த இன்சூரன்ஸ் சான்றிதழ், செல்போன் எண் ஆகியவற்றை வைத்து இறந்தவர்கள் வெள்ளையன், சின்னம்மாள் மற்றும் ஜெயராமன் என அடையாளம் தெரிய வந்தது.

அதன் பின்னர் அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து உறுதி செய்தனர். விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 4–வதும் பெண் குழந்தை என கருதி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி சாவு; நர்ஸ் கைது
உசிலம்பட்டி அருகே 4–வதும் பெண் குழந்தை என கருதி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். அவருக்கு கருக்கலைப்பு செய்த நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
2. மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பட்டதாரி பெண் பலி
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் தவறி விழுந்த பட்டதாரி பெண் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர், வேலைக்கு ஆன்லைனில் பதிவு செய்ய வந்த இடத்தில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
3. வில்லியனூர் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 வாலிபர்கள் பலி
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
4. யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
5. லாரி மீது கார் மோதல்; கட்டிட மேஸ்திரி பலி; 5 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதியதில் கட்டிட மேஸ்திரி பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.