மாவட்ட செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடந்தது.
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மற்றும் அரசு முதன்மை செயலாளரும், அண்ணா மேலாண்மை நிலையம் மற்றும் பணியாளர் பயிற்சித்துறை தலைவருமான பணீந்திர ரெட்டி தலைமையில் கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல், தோட்டக்கலைத்துறை, வளர்ச்சித்துறை, கல்வித்துறை, கூட்டுறவு, உணவு வழங்கல் துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தேசிய பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை மற்றும் துறை அலுவலர்களிடம் அனைத்து துறைகளின் சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகளைவிரைந்து முடிக்கவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. மேலும், வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பேரிடர் மேலாண்மை அலுவலகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பணீந்திர ரெட்டி கலந்தாய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.