மாவட்ட செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ராஜினாமா செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி

குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
புதுக்கோட்டை,

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால், மக்கள் அல்லல்படுகின்றனர். ஆனால், மத்திய அரசு அதன் விலையை குறைக்க முன்வரவில்லை. விலையை குறைக்கவில்லை என்றால் கண்டிப்பாக போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்டு தற்போது சி.பி.ஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால், முதல்-அமைச்சர் அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மனபக்குவத்தோடு நடந்து கொண்டிருக்க வேண்டும். தற்போது மாணவி சோபியாவின் பாஸ்போர்ட்டை முடக்குவதற்கான நடவடிக்கையை தமிழக காவல்துறை எடுத்து உள்ளது கண்டிக்கத்தக்கது. அவ்வாறு செய்தால் மாணவியின் எதிர்காலமே சீர்குலைந்து போய்விடும். சோபியா மீது அவர் கொடுத்து உள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும். மோடியின் கொள்கை தான் ஹிட்லர் கொள்கை. பா.ஜ.க. தான் பாசிச கட்சி. இதை எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வோம். எத்தனை வழக்குகள் போட்டாலும் போட்டு கொள்ளட்டும். தமிழகத்தை பாலைவனமாக ஆக்குவது என்று மத்திய அரசு முடிவு செய்து விட்டது. எனவே தான் தற்போது தமிழகத்தில் 3 இடங்களில் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு அனுமதி அளித்து உள்ளது. இது மத்திய அரசு தமிழகத்திற்கு செய்யும் பச்சை துரோகம். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மவுனமாக இருக்காமல் இதை எதிர்த்து பலத்த குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.