மாவட்ட செய்திகள்
பாம்பன் ரோடு பாலத்தின் தூண் சேதம் அதிகாரிகள் நடவடிக்கை

30 ஆண்டுகளே ஆன நிலையில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலத்தின் தூணில் கீறல் விழுந்தது. தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கவனிப்பார்களா?
ராமேசுவரம், 


ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாலத்தின் பணிகள் 1973-ம் ஆண்டு ரூ.20 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டு, 15 வருடங்களுக்கு பிறகு பணிகள் முழுமையாக நிறைவு பெற்றன. கடலுக்குள் 79 தூண்களை கொண்டு சுமார் 100 அடிக்கு மேல் உயரமாக அமைக்கப்பட்டு கான்கிரீட் தூண்கள் தாங்கி நிற்கின்றன. சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த ரோடு பாலம் உலகிலேயே கடலுக்குள் முதன் முதலாக ஹேண்டில் லிவர் சிஸ்டத்தின் அடிப்படையில் அதிநவீன கட்டுமான தொழில் நுட்பத்துடன் உலக அளவில் ஆசியாவிலேயே கட்டப்பட்ட முதல் பாலம் என்ற சிறப்பை பெற்றது.

இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தில் உள்ள ஒரு தூணில் கீறல்கள் விழுந்துள்ளது. பாலத்தின் மைய பகுதியில் உள்ள ஒரு தூணில் 2 இடங்களில் கீறல்கள் விழுந்து கான்கிரீட் பெயர்ந்து கடலுக்குள் விழுந்துள்ளது. மேலும் கீறல்கள் விழுந்த இடத்தில் கம்பிகளும் வெளியே தெரிந்த நிலையில் மோசமாக காட்சியளிக்கிறது. இதுதவிர மேலும் சில தூண்களிலும் லேசான கீறல்கள் விழுந்துள்ளன. சுமார் ரூ.18 கோடியில் ரோடு பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து 1½ வருடத்தில் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை துறைக்கு ஒதுக்கும் நிதியை அதிகாரிகள் முழுமையாக பயன்படுத்தியது கிடையாது. சீரமைப்பு பணிகளும் தரமில்லாமல் பெயரளவில் நடைபெற்றன. பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் உள்ள விளக்குகள் எரியாமல் இருளில் மூழ்கி வருகிறது.

ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், அரசு பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ரோடு பாலம் வழியாக வந்து செல்லும் நிலையில் ரோடு பாலத்தின் தூணில் கீறல்கள் விழுந்து சேதமாகி உள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.